×

பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்திலுள்ள மருதாநதி அணையிலிருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பு

பட்டிவீரன்பட்டி, நவ. 29: திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையம் மருதாநதி அணை கடந்த வாரம் முழு கொள்ளளவை எட்டியது. அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்காக விவசாயிகளும், குடிதண்ணீருக்காக பொதுமக்களும் தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். நேற்று முன்தினம் தமிழக முதல்வர் தண்ணீர் திறக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினய் மருதாநதி அணையிலிருந்து தண்ணீரை நேற்று திறந்துவிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மருதாநதி அணைக்கு தாண்டிக்குடி மலைப்பகுதி, பண்ணைகாடு, பாச்சலூர், கடுகுதடி போன்ற மலைப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் பெய்யும் மழைநீர் அணைக்கு வருகிறது. அணையின் மொத்த உயரம் 72 அடி. ஏற்கனவே 59 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் கஜாபுயல் மழையால் மளமளவென உயர்ந்து 70 அடியை எட்டியது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கொட்டிய மழையால் வறண்டு கிடந்த 10க்கும் மேற்பட்ட ஆறுகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. தற்போது அணைக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் மொத்த நீர் இருப்பு 180.5 மில்லியன் கனஅடியாகும். இதில் தற்போது 157 மில்லியன் கடிஅடி தண்ணீர் இருப்பில் உள்ளது. மேலும் இந்த அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் மூலமாக நிலக்கோட்டை, ஆத்தூர் ஆகிய இரண்டு தாலுகாவை சேர்ந்த 6 ஆயிரத்து 583 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெற உள்ளன.

மேலும் அணை நிரம்பியுள்ளதால் 7க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் ஆதாரங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மருதாநதி அணையை மாவட்ட கலெக்டர் வினய் திறந்து வைத்து நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது, மருதாநதி நீர்தேக்கத்தின் மூலமாக 2359 ஏக்கர் பழைய பாசன வசதி பெறும் நிலங்களும், 4151 ஏக்கர் புதிய பாசன வசதி பெறும் நிலங்களையும் சேர்த்து 6583 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி பெற அணை திறக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் 90 நாட்களுக்கு பழைய ஆயக்கட்டு விவசாயத்திற்கு நாள் ஒன்றுக்கு 20 கனஅடி வீதமும், முதல் 30 நாட்களுக்கு மறைமுக மற்றும் புதிய ஆயக்கட்டு விவசாயத்திற்கு நாள் ஒன்றுக்கு 70 கன அடிவீதமும் சேர்த்து 90 கனஅடி தண்ணீர் முதல் போக சாகுபடிக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.

இதன் மூலமாக ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த அய்யம்பாளையம், சித்தரேவு, தேவரப்பன்பட்டியும், நிலக்கோட்டை தாலுகாவில் சேவுகம்பட்டி, கோம்பைப்பட்டி போன்ற கிராம விவசாயிகள் பயன்பெறுகின்றனர். விவசாயிகள் இந்த தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது, மஞ்சளாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் குமார், மருதாநதி வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் சௌந்தரம், அணையின் உதவி பொறியாளர் மோகன்தாஸ், ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயச்சந்திரன், ஆத்தூர் தாசில்தார் பிரபா, சேவுகம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சக்திவேல், அய்யம்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணகுமார், பட்டிவீரன்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பாலமுருகன், மற்றும் விவசாய சங்க தலைவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags : Water opening ,river ,Maruti ,Pattiviranppatti ,Ayyampalai ,
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை