×

தொல்லியல் அறிஞர் நினைவேந்தல் நிகழ்ச்சி

தர்மபுரி, நவ.28: தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் நினைவேந்தல் நிகழ்ச்சி தர்மபுரியில் நடந்தது. தர்மபுரியில் அதியமான் சமூக வரலாற்று ஆய்வு மையம் சார்பில், தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் தொல்லியல் துறை இணை இயக்குனர் சுப்பிரமணியன் தலைமை வகித்து, ஐராவதம் உருவ படத்துக்கு மாலை அணிவித்தார்.அப்போது, அவர் பேசுகையில், திருச்சி அருகே மணச்சநல்லூரில் பிறந்த தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றினார். அப்போது சிந்துவெளி நாகரிகம் பற்றிய ஆய்வில் ஈடுபாடு காட்டினார். சிந்துவெளி முத்திரைகள், குறியீடுகள் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டதுடன் சிந்துவெளி நாகரிகத்துக்கும், திராவிட நாகரிகத்துக்கும் இடையிலான தொடர்பை நிலை நாட்டினார்.

தமிழ் பிராமி கல்வெட்டு ஆய்வில் முன்னோடியாகத் திகழ்ந்தார். 113 தமிழ் பிராமி கல்வெட்டுகளை ஆய்வு செய்து நூல் வெளியிட்டுள்ளார். சமயம், இனம், அரசியல் கடந்து அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆய்வுகளை மேற்கொண்டார். எந்தவொரு ஆய்வையும் மேலோட்டமாக, போகிற போக்கில் செய்யாமல் நேரடியாக ஆய்வுக்களத்துக்கே சென்று, முழுமையான ஆய்வுக்குப் பிறகே தமது முடிவை வெளியிடுவார். மிகச்சிறந்த பண்பும், நேர்மையும் கொண்டவர். தமிழ் செம்மொழி அங்கீகாரம் பெறுவதற்காக கடுமையாக உழைத்தவர். தமிழின் தனித்துவத்தை நிலைநாட்ட பாடுபட்டவர். அவரது மறைவு தமிழகத்துக்கு மட்டுமல்லாமல், அகில இந்தியாவுக்கே பேரிழப்பு என்றார்.

Tags : Archaeologist ,
× RELATED திருச்சுழி அருகே குதிரை படத்துடன் 800...