×

தர்மபுரி நகராட்சியில் ஆடு அறுக்கும் கூடத்தில் குவிந்து கிடக்கும் எலும்புகள்

தர்மபுரி, நவ.22:  தர்மபுரி நகராட்சி ஆடு அறுக்கும் கூடத்தில் குவிந்து கிடக்கும் எலும்புகள் மற்றும் இறைச்சி கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  தர்மபுரி டேக்கீஸ்பேட்டையில் கோட்டை கோயிலுக்கு செல்லும் சாலையில், நகராட்சி சார்பில் ஆடு அறுக்கும் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான ஆடுகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு வெட்டப்படும் ஆடுகளில் பிரித்தெடுக்கப்படும் எலும்புகள், நகராட்சி சார்பில் அவ்வப்போது அகற்றப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக எலும்புகள் முறையாக அகற்றப்படவில்லை. இதேபோல், ஆடு அறுக்கும் கூடம் உள்ள வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான எலும்புகள், இறைச்சி கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த வளாகத்தில் குவிந்து கிடங்கும் எலும்புகளை, உடனடியாக அகற்றி, வளாகத்தை தினமும் தூய்மைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தர்மபுரி ஞாயிறு வாரச்சந்தை நேரத்தில், கோட்டைகோயில் செல்லும் சாலையில் ஆடு, கோழிகள் விற்பனை செய்யப்படுவதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, ஞாயிறு சந்தை நேரத்தில் கால்நடை, கோழி விற்பனைக்கு தனி இடம் ஒதுக்கீடு செய்யநடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தர்மபுரி நகராட்சி ஆணையர் கிருஷ்ணகுமார் கூறுகையில், ‘நகராட்சி ஆடு அறுக்கும் கூடத்தில் குவிந்து கிடக்கும் எலும்பு மற்றும் இறைச்சி கழிவுகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோட்டை கோயில் சாலையில் ஞாயிறு வாரச்சந்தை நேரத்தில் ஆடுகள் சாலையில் நிறுத்தி வைத்து விற்பனை செய்வதை தடுக்கப்படும்,’ என்றார்.

Tags : municipality ,Dharmapuri ,
× RELATED பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு