×

குடிமை பொருள் வழங்கல் அலுவலகத்தில் கவர்னர் ஆய்வு

புதுச்சேரி, நவ. 21:  புதுவை கவர்னர் கிரண்பேடி அவ்வப்போது அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து நிர்வாகத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி அவற்றை நிவர்த்தி செய்ய வலியுறுத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் சாரம் பழைய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தகவல் தொழில்நுட்பத்துறை, புள்ளியியல் துறை, திட்டம் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட 3 துறைகளில் ஆய்வு மேற்கொண்டார்.
 அப்போது துறையில் ஒவ்வொரு உயர்அதிகாரிகளையும் நேரில் அழைத்து பேசிய கவர்னர், அவர்களின் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் 3 துறை அதிகாரிகளிடம் கலந்துரையாடினார். பிற துறை அதிகாரிகள் ஐ.டி. துறைக்கு கடிதம் அனுப்பும் வரை காத்திருக்காமல் நீங்களே பிற துறை செயலர்களை சந்திக்குமாறு அறிவுரை வழங்கினார்.

 இந்த நிலையில் நேற்று காலை குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை கவர்னர் கிரண்பேடி நேரில் ஆய்வு செய்தார். அப்போது முதல்மாடியில் ரேசன் கார்ட்டில் பெயர் சேர்த்தல், புதிய அட்டை விண்ணப்பம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிக்காக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து முதியவர்கள், பெண்கள் நீண்டநேரமாக காத்திருந்தனர். இதைப் பார்த்த கவர்னர் கிரண்பேடி, துறை இயக்குனர் வல்லவன் மற்றும் அதிகாரிகளிடம், பொதுமக்களை நீண்டநேரமாக அலுவலகத்தில் காத்திருக்க வைக்காமல் டோக்கன் முறையை அமல்படுத்தி உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டார். இருபது, இருபது டோக்கன்களாக அவர்களுக்கு வழங்கி சிரமத்தை தவிர்க்குமாறு அறிவுறுத்திய கவர்னர் எக்காரணத்தை கொண்டும் பொதுமக்களை மணிக்கணக்கில் அலுவலகத்தில் கும்பலாக நிற்க வைக்கக் கூடாது என எச்சரித்தார்.

 மேலும் ஆவணங்களை முறையாக பராமரிப்பதோடு, அலுவலகத்தையும், சுற்றுப் புறத்தையும் எப்போதும் தூய்மையாக வைத்திருக்க உத்தரவிட்டார். அங்குள்ள பவர் ரூம் மற்றும் கீழ்தளத்தையும் ஆய்வு செய்த கவர்னர், இருசக்கர வாகனங்களை வரிசையாக நிறுத்தி வைக்க கேட்டுக் கொண்டார்.
 பின்னர் ஆய்வுப் பணியை முடித்துவிட்டு கவர்னர் கிரண்பேடி ராஜ்நிவாஸ் புறப்பட்டு சென்றார். இந்த ஆய்வின்போது கவர்னர் மாளிகை அதிகாரிகள் உடனிருந்தனர்.


Tags : governor ,supplier ,
× RELATED 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆளுநர் ரவி வாழ்த்து..!!