×

நாகர்கோவிலில் பரபரப்பு கால்வாயை ஆக்ரமித்து கட்டிய வீடுகளை அகற்ற மக்கள் எதிர்ப்பு

நாகர்கோவில், நவ. 21:  நாகர்கோவிலில் கோட்டார் சானலை ஆக்ரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில் அருகே உள்ள வல்லன்குமாரவிளையில் இருந்து செட்டிகுளம் பூச்சாத்தான் குளத்துக்கு தண்ணீர் வரும் கோட்டார் சானல் ஆக்ரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. கடந்த சில வருடங்களுக்கு முன் பொதுப்பணித்துறை அதிகாரி தன்ராஜ் சானலில் உள்ள சில ஆக்ரமிப்புகளை அகற்றி குளத்துக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுத்தார். அவர் மாறுதலாகி சென்ற பின் மீண்டும் சானல் ஆக்ரமிக்கப்பட்டது. தற்போது இந்த சானலில் பல இடங்களில் வீடுகள், கடைகள் கட்டப்பட்டுள்ளன. ஆக்ரமிப்பு செய்யப்பட்ட கோட்டார் சானலில் தற்போது கழிவுநீர் ஓடுகிறது. இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்றம் வட்டவிளை ஜங்சனில் இருந்து கிழக்கு பகுதியில் உள்ள ஆக்ரமிப்பு வீடுகள் 15யை அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதன்படி பொதுப்பணித்துறை சார்பில் அந்த வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதைதொடர்ந்து நேற்று வீடுகளை இடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

பொதுப்பணித்துறை பழையாறு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் வசந்தி, நாகர்கோவில் பாசனப்பிரிவு உதவி பொறியாளர் ரமேஷ்ராஜன் தலைமையில் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார், துணை தாசில்தார் பாபு, வருவாய் ஆய்வாளர் அனிதா, வடிவீஸ்வரம் தெற்கு கிராம நிர்வாக அலுவலர் நாகலிங்கம், நகர டிஎஸ்பி இளங்கோ மற்றும் அதிகாரிகள் பொக்லைனுடன் ஆக்ரமிப்புகளை அகற்ற அங்கு வந்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பொக்லைன் முன் நின்று போராட்டம் நடத்தினர். அப்போது வீடுகளை இடிக்க அனுமதிக்க மாட்டோம். கோட்டார் சானல் ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்ற வேண்டும். குறிப்பிட்ட சிலரின் வீடுகளை மட்டும் இடிக்க அனுமதிக்க மாட்டோம் என கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து அதிமுக மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில், அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாறன், இளைஞரணி செயலாளர் ஜெயசீலன், நகர செயலாளர் சந்துரு, மாவட்ட துணை செயலாளர் ராஜன், நிர்வாகிகள் விக்ரமன், ரபீக், தமாகா நகர தலைவர் சேகர், முன்னாள் கவுன்சிலர் ஜெயராமன் மற்றும் நிர்வாகிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். திடீரென வீடுகளை இடிப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாவார்கள். எனவே ஒரு வாரம் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என கூறினர். இதனை தொடர்ந்து 29ம் தேதி வரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் காலஅவகாசம் கொடுத்தனர். மேலும் பொதுமக்களிடம் 29ம் தேதிக்குள் வீடுகளை காலி செய்து விடுவோம் என எழுதி வாங்கினர். இதனையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். பின்னர் அதிமுகவினர் மற்றும் வட்டவிளை பகுதி மக்கள் கலெக்டரை சந்தித்து, வீடுகளை இழப்பவர்களுக்கு மாற்று இடம் கொடுக்க கோரிக்கை வைத்தனர்.

Tags : houses ,tunnel canal ,Nagarcoil ,
× RELATED கோடை விடுமுறையால் திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்