×

குளித்தலையில் நிரந்தர பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

கரூர், நவ. 20: குளித்தலையில் நிரந்தர பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. குளித்தலை பகுதி மாணவர்கள், இளைஞர்கள் பொதுமக்கள் கூட்டமைப்பினர் அளித்த கோரிக்கை மனு: கரூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு நகராட்சிகளில் குளித்தலையும் ஒன்று. நகராட்சியாக தரம் உயர்ந்து 24 ஆண்டுகள் ஆகிறது. இன்று வரை நகராட்சியில் நிரந்தர பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை. தற்போது 1000க்கும் மேற்பட்ட பேருந்துகள் செல்கிறது. நகராட்சி தற்காலிக பேருந்து நிலையத்தில் 4 பேருந்துகள் மட்டுமே நிறுத்த முடியும். பேருந்து நிலையத்தில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. பல ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் இப்பேருந்துநிலையம் வந்து செல்கின்றனர்.

நகராட்சிக்கு அனைத்து வரிகளும் மக்கள் செலுத்துகின்றனர். ஆனால் பேருந்து நிலையம் கட்ட எந்த ஏற்பாடும் இல்லை. பேருந்து நிலையமும் இல்லை வரியும் அதிகமாக உள்ளதால் நகராட்சியை தரம் குறைத்து ஊராட்சியாக மாற்ற வேண்டும். அருகில் உள்ள முசிறி பேரூராட்சியாக இருந்தும் 2 பேருந்து நிலையம் உள்ளது. குளித்தலை தாலுகாவில் தோகைமலை ஊராட்சியில் நவீன பேருந்துநிலையம் உள்ளது. இது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி போட்டியிட்ட முதல் தொகுதியாகும். மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டினார். எனினும் 24 ஆண்டாக மக்கள் வேதனையுடன் உள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டுவிழாவில் முதல்வர் எடப்பாடி குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க பரிசீலிக்கப்படும் என அறிவித்தார். எனவே தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.குளித்தலையில் நிரந்தர பேருந்துநிலையம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஊராட்சியாக மாற்றி மக்களின் வரிச்சுமையை குறைக்கவேண்டும். கலெக்டர் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று புதிய நவீன பேருந்து நிலைய பணியை தொடங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். குளித்தலை தாலுகா கழுகூர் கிராம மக்கள் அளித்த மனுவில், கஜா புயலில் 1000 வாழைகள் சேதம் அடைந்துள்ளது. இதனை ஆய்வு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

புலியூர் வெங்கடாபுரம் பகுதி மக்கள் அளித்த மனுவில், அரசு மதுபானக்கடைக்கு வருபவர்கள் தினமும் தெருவின் குறுக்கே வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இரவு வேளையில் கூட இதே நிலை உள்ளது. வேலைக்கு செல்லும் பெண்களிடம் தகாத வார்த்தைகளை கூறி திட்டுகின்றனர். எனவே இந்த மனுவை பரிசீலித்து கடையை மாற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். மாவட்ட இந்து முன்னணி சார்பில் அளித்த மனுவில், கரூர் நகரம் சின்னஆண்டாங்கோயில் சிண்டிகேட் நகர், பாரி நகர் பகுதியில் 100 சதவீதம் இந்துக்களே குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதியில் மசூதி கட்டப்படுவதாக தெரிகிறது. இப்பகுதியில் கட்டுவது வரும் நாட்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும்.

சின்ன ஆண்டாங்கோயில் பகுதியில் எப்போதும்போல் அமைதி நிலவ வேண்டுமானால் சட்டவிரோதமாக கட்டப்பட உள்ள மசூதிக்கு தடைவிதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் அளித்த மனுவில், ஏமூர் ஊராட்சி கொங்குநகர் பகுதியில் அடிப்படைவசதிகள் இல்லை. பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் பயனில்லை. மின்விளக்கு சரி செய்து தர வேண்டும். குடிநீர் போர்வெல் பழுதாகிஉள்ளதை சரி செய்ய வேண்டும்.

சாலைவசதி, கூடுதல் பேருந்து வசதி செய்ய வேண்டும். பொதுமக்கள் பயன்பாட்டிற்கு என ஒதுக்கிய இடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். நுழைவு வாயிலில் சோடியம் மின்விளக்குகள் அமைக்க வேண்டும். காட்டுப்பகுதியில் திருட்டு பயம், குடிபோதையில் நடமாடும் நபர்களால் அச்சம் உள்ளதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இனியும் நடவடிக்கை இல்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என குறிப்பிட்டுள்ளனர்.

Tags : bus station ,bathroom ,office ,Karoor Collector ,
× RELATED மாநகர பேருந்து படியில் பயணம்; ‘உள்ளே...