×

கொத்தடிமையாக சிக்கி தவிப்பு குடும்பத்தினருடன் வந்து கூலி தொழிலாளி மனு

கடலூர், நவ. 20:கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. பண்ருட்டி அருகே தட்டாம்பாளையம் சூரக்குப்பத்தை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளி பரமசிவம்(57), அவரின் மனைவி அஞ்சாலாட்சி(52), மகள் சுமதி(36), மருமகன் விஜயகுமார்(42) ஆகியோர் இக்கூட்டத்திற்கு வந்து, கொத்தடிமையாக சிக்கியுள்ள தங்களை காப்பாற்றக்கோரியும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரனிடம் மனு அளித்தனர்.

அதில் அவர்கள் குறிப்பிட்டிருந்ததாவது: நான்கு வருடங்களுக்கு முன் எங்கள் ஊரை சேர்ந்தவரிடம் ரூ.ஒருலட்சம் பணம் வாங்கி கொண்டு கரும்பு வெட்டும் வேலைக்கு சேர்ந்தோம். அவர் எங்களை தஞ்சாவூர், மதுரை, சிவகாசி, அறந்தாங்கி, திருப்பனந்தாள், ஆந்திர மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று கரும்பு வெட்ட வைத்தார். ஒரு டன் வெட்டினால் ரூ.650 கூலி. எங்கள் குடும்பம் நாளொன்றுக்கு மூன்று முதல் மூன்றரை டன் வரை கரும்பு வெட்டும். ஆனால் நான்கு ஆண்டுகளாக அவர் கூலிஏதும் கொடுத்ததில்லை.
 
ரூ.ஒரு லட்சம் கடனாக வாங்கியிருப்பதை சுட்டிக்காட்டி எங்களுக்கு கூலி வழங்காமல் சாப்பாடு மட்டும் போட்டு வேலை வாங்கி வந்தார். பொங்கலுக்கு மட்டுமே ஊருக்கு அனுப்புவார். கடந்த நான்கு ஆண்டுகளாக கொத்தடிமையாக எங்கள் குடும்பம் கூலியின்றி பல்வேறு கஷ்டங்கள் அனுபவித்தது. கடந்த இரு மாதங்களுக்கு முன் தான் நாங்கள் ஊருக்கு வந்தோம்.  ரூ.ஒன்றே கால் லட்சம் ரூபாய் தர வேண்டும், இல்லை என்றால் கூலியின்றி மீண்டும்  உள்ளூரில் கரும்பு வெட்டும் வேலை செய்ய வேண்டுமென அவர் மிரட்டுகிறார்.

எனவே கொத்தடிமையிலிருந்து எங்களை விடுவித்து சுதந்திரமாக வாழ வழி வகை செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மனு மீது கடலூர் சார் ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : strangers ,
× RELATED அறிமுகம் இல்லாதவர்களுக்கு தானே செய்த...