×

தேரேக்கால்புதூர், மகராஜபுரம், லாயம், ஞாலம் ஊராட்சிகளில் இலவச கறவை பசுக்கள் வழங்கும் திட்ட பயனாளிகள் இன்று தேர்வு

நாகர்கோவில், நவ. 16: குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் ஏழை மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களில் ஒன்றான இலவச கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் 2011ம் ஆண்டு முதல் தமிழகத்தில்செயல்படுத்தப்பட்டு வருகிறது.  குமரி மாவட்டத்தில் முதன்முதலாக 2018-2019ம் ஆண்டு இலவச கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. அதன் தொடர்ச்சியாக 2018-2019 ஆண்டிற்கான இத்திட்டத்தில் தமிழகம் முழுவதும் 12,000 பயனாளிகள் 12,000 கறவைப் பசுக்களை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

டிசம்பர் மாதத்தில் வழங்கப்பட வேண்டிய அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தில் தேரேகால்புதூர் மற்றும் மகராஜபுரம் கிராம ஊராட்சிகளிலும், தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் லாயம் மற்றும் ஞாலம் ஆகிய 4 ஊராட்சிகளில் தகுதியான பயனாளிகளுக்கு இலவச கறவை பசுக்கள் வழங்க பயனாளிகள் தேர்வு இன்று (16ம் தேதி) அந்தந்த ஊராட்சிகளில் கிராம சபா கூட்டத்தில் நடைபெற உள்ளது. தேர்வு குழுவில் உறுப்பினர்களாக கால்நடை உதவி மருத்துவர், ஊராட்சி ஒன்றிய அளவிலான அலுவலர்கள் மற்றும் ஆதிதிராவிட உறுப்பினர்கள் செயல்படுவார்கள்.

தேர்வு குழுவால் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட கலெக்டரால் இறுதி செய்யப்படும் பட்டியலில் உள்ள பயனாளிகளுக்கு கறவை பசுக்கள் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயனாளிகளாக பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். ஏற்கனவே இலவச கறவை பசுக்கள் பராமரித்து வரும் பயனாளிகளுக்கு வழங்க இயலாது. 30 சதவீதம் ஆதிதிராவிட வகுப்பினர் தேர்வு செய்யப்படுவார்கள். எனவே இலவச கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்பும் நபர்கள் இன்று அந்தந்த ஊராட்சிகளில் நடைபெறும் கிராமசபா கூட்டத்தில் பங்கு பெற்று விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Ranch ,Maharajapuram ,
× RELATED வத்திராயிருப்பு அருகே ட்ரோனில்...