×

கஞ்சா விற்று கொடுக்க மறுத்த புதுவை வாலிபருக்கு மிரட்டல்

புதுச்சேரி,  நவ. 15: கோரிமேட்டில் கஞ்சா விற்றுக் கொடுக்க மறுத்த வாலிபரை செல்போனில்  நூதனமாக படம்பிடித்து பணம் கேட்டு மிரட்டிய திருவண்ணாமலை ஆசாமியை மடக்கி  பிடித்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். புதுவை, குண்டுபாளையம், களத்துமேடு, கருமாரியம்மன் கோயில் வீதியில்  பகுதியில் வசிப்பவர் விக்கி என்ற ராஜா விக்னேஷ் (24). பெயிண்டரான இவர்  சம்பவத்தன்று தனது நண்பரான சக்தியுடன் தட்டாஞ்சாவடி உள்ள பெட்டிக் கடைக்கு  பீடி வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கு அடிக்கடி வந்து சென்ற  திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பவுன்குமார் என்ற பிரவீன்குமார்  அவருக்கு அறிமுகமானார். இருவரும் மாறிமாறி தேனீர் வாங்க காசுகொடுத்து  பழக்கமான நிலையில் சில தினங்களுக்கு முன்பு விக்கியை போன்செய்து காமராஜர்  சாலை, மாரியம்மன் கோயில் பஸ் நிறுத்தம் அருகே வருமாறு அழைத்துள்ளார்.
  அவரும் அங்கு வந்த நிலையில் தான் கையில் வைத்திருந்த கஞ்சா பாக்கெட்டுகளை  கொடுத்து அதை விற்று தருமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் மறுத்த நிலையில்,  சரி பரவாயில்லை... இதில் எத்தனை பொட்டலங்கள் இருக்கிறது என்பதையாவது எண்ணி  சொல்... என்று கூறினாராம்.

 இதையடுத்து அவர் கஞ்சா பொட்டலங்களை கீழே  கொட்டி அதை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதை அவருக்கு தெரியாமல் தனது  செல்போனில் படம்பிடித்த பவுன்குமார், பிறகு அதை விக்கியிடம் காண்பித்து  தான் சொன்னதை செய்யாவிடில் போலீசிடம் பிடித்துக் கொடுத்து விடுவேன் என்று  மிரட்டியுள்ளார். கஞ்சாவை விற்று தராவிடில் ரூ.30 ஆயிரம் தருமாறு  கேட்டுள்ளார். இதனால் மிரண்டுபோன அவர் தனது தாயிடம் முறையிட்டுள்ளார்.  இது பவுன்குமாருக்கு தெரியவரவே,  ரூ.60 ஆயிரமாக பணத்தை உயர்த்தி கேட்டுள்ளார்.  இதையடுத்து தனது தாயிடம் ரூ.2 ஆயிரத்தை வாங்கி பவன்குமாரிடம், விக்கி  கொடுத்துள்ளார். ஆனால் அதன்பிறகும் மிரட்டல் தொடர் கதையாகவே நேற்று  கோரிமேடு காவல் நிலையத்தில், விக்கி நடந்த சம்பவத்தை போலீசாரிடம் கூறி  பவுன்குமார் மீது நடவடிக்கை எடுக்க முறையிட்டார். இதையடுத்து வடக்கு  எஸ்பி ரக்சனா சிங் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்  கலையரசன் தலைமையிலான போலீசார் நேற்று வழக்குபதிந்து விசாரணை நடத்தினர்.  அவர் கொடுத்த தகவலின்பேரில் தட்டாஞ்சாவடி பகுதியில் உலாவந்த பவுன்குமாரை  சுற்றிவளைத்த போலீசார் அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் யார், யார் புதுவையில் இதேபோல் முகாமிட்டு கஞ்சா விற்பனையில்  ஈடுபட்டு வருகின்றனர் என்ற தகவலை திரட்டி கைது நடவடிக்கையில்  இறங்கியுள்ளனர். இதனால் விரைவில் கஞ்சா கும்பலைச் சேர்ந்த அனைவரும்  சிக்குவர் என்று தெரிகிறது.

Tags : kanja ,
× RELATED சமூக விரோதி படத்துக்கு மறுதணிக்கை