×

இன்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் நாமக்கல் கோர்ட்டில் 10 பேர் சாட்சியம்

நாமக்கல், அக்.31: இன்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில், நாமக்கல் கோர்ட்டில் 10 பேர் சாட்சியம் நேற்று சாட்சியம் அளித்தனர். சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த இன்ஜினீயர் கோகுல்ராஜ்(23). கடந்த 2015 மே 24ம் தேதி பள்ளிபாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து நாமக்கல் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து, சங்ககிரி தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 17 ேபரை கைது செய்தனர்.இந்த வழக்கில் தொடர்புடைய  ஜோதிமணி கொலை செய்யப்பட்டு விட்டார். அமுதரசு என்பவர் வழக்கு விசாரணையின் போது ஆஜராகவில்லை. கொலை வழக்கில் சாட்சிகள் விசாரணை, கடந்த இரு மாதமாக நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இந்த வழக்கில் கோகுல்ராஜின் தாய் சித்ரா, கல்லூரி தோழி சுவாதி, அவரது தாயார் செல்வி, கோகுல்ராஜின் சகோதரர் கலைச்செல்வன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சாட்சிகள் விசாரணை நடைபெற்றது. அப்போது, திருச்சி மத்திய சிறையில் உள்ள சங்ககிரி  தீரன் சின்னமலை கவுண்டர்கள் பேரவை நிறுவனர் யுவராஜ்(41) உள்ளிட்ட 15 பேரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். யுவராஜூக்கு கார் விற்பனை செய்த ரமேஷ்குமார், ஸ்டிக்கர் கடை உரிமையாளர் ரமேஷ், ஊழியர் கவரிசங்கர், எஸ்டிடி பூத் உரிமையாளர் பாலகிருஷ்ணன், கார் புரோக்கர்கள் செல்வரத்தினம், சீனிவாசன் சங்ககிரி மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன், எஸ்ஐ பாசியந்த், டீக்கடை உரிமையாளர் குமார், செல்போன் கடை உரிமையாளர் தினேஷ்குமார், ஆகிய 10 பேர் சாட்சியம் அளித்தனர். இவர்களிடம் அரசு வழக்கறிஞர் கருணாநிதி விசாரணை நடத்தினார்.
இதையடுத்து நீதிபதி இளவழகன் வழக்கு விசாரணையை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 36 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.

Tags : Engineer Gokulraj ,court ,Namakkal ,
× RELATED நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் நேரில் ஆஜர்