×

பிஆர்டிசி ஊழியர்கள் ஸ்டிரைக் நீடிப்பு

புதுச்சேரி,  அக். 30: பிஆர்டிசி ஊழியர்கள் ஸ்டிரைக் நேற்று 5வது நாளாக நீடித்தது. இதனால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து  சேவை பாதிப்புகள் தொடபாக அரசியல் கட்சிகள் வாய்திறக்காமல் மவுனம்  காப்பதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். புதுவையில் பிஆர்டிசி  ஊழியர்கள் கடந்த 25ம்தேதி வேலை நிறுத்தத்தை தொடங்கினர். பிஆர்டிசி நிர்வாகத்தை தொழிற்சங்கத்தினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய  நிலையில் 2 மாத சம்பளம் வழங்க ஒப்புதல் தெரிவித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டது.  அதே வேளையில் பிஆர்டிசி ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்பாவிடில் ஒழுங்கு  நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
 ஆனால் அக்டோபரையும்  சேர்த்து 3 மாத சம்பளத்தை வழங்கினால் மட்டுமே பணிக்கு திரும்புவோம்  எனக்கூறி பிஆர்டிசி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை நீட்டிப்பு செய்து  வருகின்றனர். நேற்று 5வது நாளாக வேலை நிறுத்தம் நீடித்தது. இதன் காரணமாக வாரத்தின் முதல்நாளான நேற்று சென்னை உள்ளிட்ட  பிற பகுதிகளுக்கு செல்லும் ஐடி ஊழியர்கள், அரசு பணியாளர்கள், பொதுமக்கள்  மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
 பிஆர்டிசி முன்பதிவு அலுவலகமும் மூடியே  கிடப்பதால் ஏமாற்றமடைந்தனர். இதன் காரணமாக தமிழக அரசு பஸ்களில் கூட்டம்  முண்டியடித்தது. பிஆர்டிசி ஸ்டிரைக்கை சமாளிக்கும் வகையில் தமிழக அரசு  கூடுதலாக பஸ்களை இயக்கியது. மேலும் புதுச்சேரி- சென்னை ரயிலும் கூட்டம்  அதிகமாக இருந்தது.

 இதனிடையே மினி பஸ்களும் இயக்கப்படாததால் அன்றாட  பணிக்கு செல்லும் கூலி தொழிலாளர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் மிகவும்  பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தீபாவளி நெருங்கி விட்டதால் முக்கிய  கடைவீதிகளுக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டுள்ளனர். இருப்பினும்  இவ்விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் வாய்  திறக்காமல் அமைதி காப்பதால் பொதுமக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். பிஆர்டிசி  வேலை நிறுத்தத்தை உடனே முடிவுக்கு கொண்டு வர வேண்டும் இல்லாவிடில் மாற்று  ஏற்பாடுகளை அரசு கையாள வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

Tags : PRCC ,
× RELATED பிஆர்டிசி நடத்துனர் சுருண்டு விழுந்து சாவு