×

காரைக்கால் ஜிப்மர் கல்லூரி மூடப்படாது

புதுச்சேரி, அக். 26: காரைக்காலில் இயங்கி வரும் ஜிப்மர் மருத்துவ கல்லூரியின் கிளை எக்காரணம் கொண்டும் மூடப்படாது என்று முதல்வர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி கோரிமேட்டில் மத்திய அரசுக்கு சொந்தமான ஜிப்மர் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியின் கிளை, காரைக்காலில் இயங்கி வருகிறது. புதுச்சேரி ஜிப்மரில் 150 இடங்கள், காரைக்கால் ஜிப்மர் கிளையில் 50 இடங்கள் என மொத்தம் 200 எம்பிபிஎஸ் இடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்பட்டு வருகின்றன. புதுச்சேரி ஜிப்மரில் படிக்கும் மாணவர்கள், தேவையான செய்முறை பயிற்சிகளை இங்குள்ள மருத்துவமனையிலேயே பெறுகின்றனர்.
 ஆனால், காரைக்காலில் உள்ள ஜிப்மர் மாணவர்களுக்கு, அங்குள்ள புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் தான் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் அங்கு போதிய அடிப்படை வசதிகளும், ஆய்வு கருவிகளும், பயிற்சிக்கு தேவையான சிகிச்சை வசதிகளும் இல்லை. இதனால் காரைக்கால் ஜிப்மர் மாணவர்களால், உரிய பயிற்சியை பெற முடியவில்லை. இதன் காரணமாக, காரைக்கால் ஜிப்மர் கல்லூரியை அடுத்தாண்டு முதல் மூட திட்டமிட்டு இருப்பதாகவும், அங்கு படிக்கும் மாணவர்கள் புதுச்சேரி ஜிப்மர் வளாகத்துக்கு மாற்றப்படுவார்கள் எனவும் தகவல் பரவியது. இவ்விவகாரம் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில் நேற்று காரைக்கால் சென்ற முதல்வர் நாராயணசாமி அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதன் ஒரு பகுதியாக, காரைக்கால் திருநள்ளாறு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலர் சஞ்சய்தத், அமைச்சர் கமலக்கண்ணன், முன்னாள் எம்எல்ஏ மாரிமுத்து, மாவட்ட தலைவர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 கூட்ட முடிவில் முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது: காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன், வருகிற பாராளுமன்ற தேர்தல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளிடம், வருகின்ற பாராளுமன்ற தேர்தலை கவனமுடன் கையாள கேட்டுகொள்ளப்பட்டது.கட்சியினர் ஒவ்வொரு வீடாக சென்று மோடி அரசின் 5 ஆண்டு கால தவறுகள், மக்கள் விரோத ஆட்சி முறை குறித்து விரிவாக எடுத்து கூறி, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்படுமாறு முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்றிலிருந்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற அனைவரும் பாடுபடவேண்டும் என கேட்டு கொண்டேன்.
 தீபாவளி பண்டிகையையொட்டி, காரைக்காலில் சிறப்பு அங்காடி திறப்பது குறித்து விரைவில் அறிவிப்பு செய்யப்படும். காரைக்காலில் இயங்கி வரும் ஜிப்மர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை மூடப்படவுள்ளதாக ஒரு சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இது தவறானது. இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். நலவழித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோருடன் பேசி இது தவறானது என்பதை மக்களுக்கு புரிய வைக்க வலியுறுத்தியுள்ளேன். எக்காரணம் கொண்டும் காரைக்காலில் உள்ள ஜிப்மர் கல்லூரி மூடப்படாது.

Tags : Karaikal Jibmer College ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...