×

காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் அடுத்தடுத்து திருப்பம் அப்பாசுடன் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய ரவுடி இம்ரானுதீன்

சென்னை: கொலை செய்யப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் அப்பாஸ் மற்றும் நண்பர்கள் புடைசூழ ரவுடி இம்ரானுதீன் 3 அடி பட்டாக்கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் பிரமுகர் முகமது தாஜூதீன் அப்பாஸ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான இம்ரானுதீன் நேற்று முன்தினம் நாகை நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த ஐஸ் அவுஸ் போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்படி, நாகை கிளை சிறையில் இருந்து இன்று சென்னைக்கு அழைத்து வர போலீசார் நாகைக்கு சென்றுள்ளனர்.
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட முகமது தாஜூதீன் அப்பாஸ் மற்றும் சக நண்பர்கள் புடைசூழ ரவுடி இம்ரானுதீன் பட்டாக்கத்தியுடன் தனது பிறந்த நாள் விழாவை வெகு விமர்சையாக கொண்டாடி உள்ளார். முகமது தாஜூதீன் அப்பாஸ் கொலை செய்யப்பட்ட பிறகு, அவரது ஆதரவாளர்கள் தற்போது பிறந்த நாள் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், பிறந்த நாள் விழாவின் போது ரவுடி இம்ரானுதீன் 3 அடி நீளமுடைய பட்டாக்கத்தியால் கேக் வெட்டுகிறார். வெட்டிய கேக்கை தனது நண்பரும் கொலை செய்யப்பட்ட முகமது தாஜூதீன் அப்பாசுக்கு தான் முதலில் ஊட்டுகிறார். பதிலுக்கு முகமது தாஜூதீன் அப்பாஸ், இம்ரானுதீனுக்கு கேக் ஊட்டி பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள். அதன் பிறகு சக நண்பர்கள் ஒவ்வொருவராக பட்டாக்கத்தியுடன் ரவுடி இம்ரானுதீனுடன் நின்று “பாகுபலி” என்று கூறியபடி புகைப்படம் எடுக்கின்றனர்.

இதனால் பிறந்த நாளில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய வழக்கில் இம்ரானுதீன் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ரவுடி பினு தாம்பரம் அருகே 150 ரவுடிகள் புடைசூழ அரிவாளால் பிறந்த நாள் கேக் வெட்டிய வழக்கில் தற்போது வேலூர் சிறையில் உள்ளார். சில நாட்களுக்கு முன்பு எம்ஜிஆர் நகரில் வாலிபர் ஒருவர் நண்பர்களுடன் சாலையில் அரிவாளால் பிறந்த நாள் கேக் வெட்டி கைதாகி ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒருவர் சரண்
காங்கிரஸ் பிரமுகர் முகமது தாஜூதீன் அப்பாஸை வெட்டி கொலை செய்த வழக்கில், தேடப்பட்டு வந்த குற்றவாளிகளின் ஒருவரான ராயப்பேட்டையை சேர்ந்த தாவூத் உசேன் (24) என்பவர் நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தான். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி தாவூத் உசேனை போலீசார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதுவரை இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி இம்ரானுதீன் உட்பட 2 பேரை சரணடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Rudy Imranuddin ,Abbas ,
× RELATED கடனை கேட்டு பெண்ணை தாக்கிய 4 பேர் கைது