×

வைரலாக பரவும் வாட்ஸ்அப் வீடியோ மரக்கிளை முறிந்து மின்கம்பத்தில் விழுந்ததால் மருத்துவக்குடியில் 3 நாட்களாக மின்தடை பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

கும்பகோணம்,அக்.23: மரக்கிளை முறிந்து மின்கம்பத்தில் விழுந்ததால் கும்பகோணம் அடுத்த மருத்துவக்குடி கிராமத்தில் 3 நாட்களாக மின்தடை ஏற்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கும்பகோணம் பகுதியில் கடந்த 19ம் தேதி மழை ெபய்தது. அப்போது மருத்துவக்குடி தெற்கு தெரு சாலையோரம் இருந்த முருங்கைமரத்தின் கிளை முறிந்து மின்கம்பத்தில் விழுந்தது. இதனால் மின்வயர் அறுந்து மின்சாரம் தடைப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள், மின்சாரத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஆனனால் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வந்தனர்.  பின்னர் தஞ்சையில் உள்ள மின்சாரத்துறை உயரதிகாரிகளிடம் பொதுமக்கள் தெரிவித்தபோது மரக்கிளை விழுந்ததால் மின் கம்பத்தில் விரிசல் விட்டுள்ளது. அதனால் அங்குள்ள மின்கம்பத்தை மாற்றிய பிறகு தான் மின்சாரம் வழங்க முடியும் என்றனர்.

இந்நிலையில் மருத்துவக்குடி கிராமத்தில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்நிலையில் மின்கம்பத்தை சீர் செய்வதாக மின்வாரிய துறையினர் தெரிவித்தனர். ஆனால் நேற்று வந்து சீரமைக்கவில்லை. இதை கண்டித்து சுவாமிமலை- திருவைக்காவூர் சாலையில் மருத்துவக்குடி கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சுவாமிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நாளை (இன்று) மதியம் 11 மணிக்குள் மின்கம்பத்தை சீரமைத்து மின்சாரம் வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இன்று 11 மணிக்குள் மின்சாரம் வழங்காவிட்டால் மீண்டும் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED சத்யா விளையாட்டு அரங்கத்தில் 1000 மரக்கன்றுகள்