×

நகராட்சி பணியின்போது கை இழந்த தொழிலாளர் மாற்றுப்பணி கேட்டு மனு

தேனி, அக். 23: தேனி நகராட்சியில் துப்புரவுப்பணியின்போது, துருபிடித்த ஊசி குத்தியதில் கையை இழந்த பணியாளர் தனக்கு மாற்றுப்பணி கேட்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார்.  
தேனி நகராட்சிக்குட்பட்ட ஒண்டிவீரன் காலனியில் குடியிருப்பவர் சேகர்(51). இவர் கம்பம் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து, கடந்த ஆண்டு  தேனி நகராட்சிக்கு மாறுதலாகி வந்தார். கடந்த ஆண்டு தேனி நகராட்சி 4 வது வார்டில் கழிவு நீரோடையில் இறங்கி சுத்தப்படுத்தும் பணியில் கையுறை எதுவுமின்றி பணிசெய்தார். அப்போது,நோயாளிகளுக்கு மருந்து செலுத்தப்படும் ஊசி இவரது கையில் குத்தியது. இதற்கு உரிய சிகிச்சை பார்க்காத நிலையில் இவரது கையில் சீழ் பிடித்து ஆபத்தான நிலைக்கு சென்றார்.
இதில் அவரது வலது முழங்கை அளவிற்கு மருத்துவர்கள் வெட்டினர்.
இதனால் இவர் துப்புரவுப் பணிக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இவருக்கு துப்புரவுப் பணிக்கு மாற்றாக வேறு பணி வழங்கக்கேட்டு நகராட்சியில் கோரிக்கை விடுத்தும் பலனில்லை.
இதனால் நேற்று சேகர் அவரது மனைவி மற்றும் பிளஸ் 1 படிக்கும் ஒரே மகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்து, தனக்கு மாற்றுப்பணி வழங்கவும், பணி வழங்கும்வரை தொடர்ந்து மாதச் சம்பளம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார்.

Tags : employer ,
× RELATED முதலாளியின் வருமானத்தை காக்க, அரசு தன்...