×

ஒகேனக்கல் பிரதான குழாயில் உடைப்பு குடிநீர் கிடைக்காமல் மலைகிராம மக்கள் அவதி

தர்மபுரி, அக்.11:  பென்னாகரம் அருகே சாலை பணியின் போது, ஒகேனக்கல் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால், 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக குடிநீரின்றி மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பென்னாகரம் அருகே வட்டுவனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கோடுப்பட்டி, தாசம்பட்டி, குழிப்பட்டி, மருக்காரம்பட்டி, பவளந்தூர், முருங்கமரத்தரசு, அட்டப்பள்ளம், உப்பலாபுரம், ஜெல்மாரம்பட்டி உள்ளிட்ட வனப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு தாசம்பட்டியில் இருந்து, குழாய் மூலம் ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், தாசம்பட்டி ஆலமரத்துப்பட்டி வரை சுமார் 10 கி.மீ தூரத்திற்கு தார் சாலையை புதுப்பிக்கும் பணி நடந்தது.

பொக்லைன் மூலம் சாலை விரிவாக்க பணி மேற்கொண்ட போது, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து சேதமடைந்தது. குழாய் உடைப்பால், இந்த வழியாக தண்ணீர் விநியோகம் செய்வது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வட்டுவனஹள்ளி பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு, ஒகேனக்கல் குடிநீர் கிடைக்காமல் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, 20 கிராம மக்களும் தங்களது குடிநீர் தேவைக்காக 5கி.மீ தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, வட்டுவனஹள்ளி ஊராட்சி செயலாளர், பென்னாகரம் பிடிஓ, கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் பலமுறை மக்கள் புகார் கூறியும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, குடிநீர் குழாய் உடைப்பை விரைவில் சீரமைத்து, குடிநீர் விநியோகத்தை சீராக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : hills ,breaking ,Hogenakkal ,
× RELATED தகிக்கும் மலைகளின் அரசி:...