×

ஒட்டப்பட்டியில் சிறுவர் பூங்காவை சீரமைக்க வலியுறுத்தல்

தர்மபுரி, அக்.10: தர்மபுரி அருகே ஒட்டப்பட்டியில் உள்ள சிறுவர் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சிக்குட்பட்டது ஒட்டப்பட்டி வள்ளுவர் நகரில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக, வள்ளுவர் நகரின் நடுவே, சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில், சிறுவர்கள் விளையாட சறுக்கு, ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊராட்சி நிர்வாகத்தின் பராமரிப்பு குறைபாடு காரணமாக, பூங்காவில் முட் செடிகள் வளர்ந்து புதர் மண்டிய நிலையில் உள்ளது. விளையாட்டு உபகரணங்கள் உடைந்ததால், பூங்காவிற்கு வரும் சிறுவர்கள், முதியவர்கள் வருகை நாளடைவில் குறைந்து  விட்டது.

தற்போது இந்த பூங்காவின் உள்பகுதியில் மணல், குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் பாம்பு, பூராண் உள்ளிட்ட விஷ ஜந்துகளின் கூடாரமாக மாறிவிட்டது. இவை பூங்காவை சுற்றியுள்ள வீடுகளுக்குள் புகுந்துவிடுவதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். வள்ளுவர் நகரை சேர்ந்த மக்கள் மாலை நேரத்தில், பூங்காவில் ஓய்வெடுத்து வந்த நிலையில் பல ஆண்டுகளாக பூங்கா பராமரிப்பு இல்லாமல் உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகத்தினர் பூங்காவை சீரமைத்து, விளையாட்டு உபகரணங்கள் அமைத்து பராமரிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : children ,park ,
× RELATED காலை உணவு திட்டத்தின் கீழ் 37,757 பள்ளி குழந்தைகள் பசியாறுகிறது