×

இன்சூரன்ஸ் பதிவு, இழப்பீடு வழங்கும் பணி தடையின்றி நடக்க கூட்டுறவு வங்கிகளில் இன்டர்நெட் வசதி விவசாயிகள் வலியுறுத்தல்

சிவகங்கை, அக்.10: இன்சூரன்ஸ் பதிவு, இழப்பீடு வழங்கும் பணிகள் தடையின்றி நடக்க, அனைத்து வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும்(கடன் சங்கம்) இண்டர்நெட் வசதி ஏற்படுத்த வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இன்சூரன்ஸ் இழப்பீடு தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்காமல், நேரடியாக வழங்கினால் பல்வேறு முறைகேடுகள் நடக்கும். எனவே வங்கி கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து கடந்த ஆண்டு, 2016ம் ஆண்டிற்கான பயிர் இன்சூரன்ஸ் இழப்பீடு, சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என கூறப்பட்டது. இதையடுத்து 2017ம் ஆண்டில் இழப்பீடு வழங்கப்படும் போது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் 130 வேளாண் கூட்டுறவு வங்கிகளில் தாலுகா, ஒன்றிய தலைமையிடங்களில் உள்ள வங்கிகள் மற்றும் சில வங்கிகள் தவிர நூற்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் இண்டர்நெட் வசதி இல்லாததால் விவசாயிகளின் வங்கி கணக்கில் இழப்பீட்டை வரவு வைக்க முடியவில்லை.இதையடுத்து சம்பந்தப்பட்ட தாலுகா அல்லது ஒன்றிய தலைமையிடத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் புதிய வங்கி கணக்கு தொடங்க விவசாயிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.  புதிய கணக்கு தொடங்க வழக்கம்போல் இழப்பீட்டில் கை வைப்பார்கள் என்பதால் புதிய கணக்கு தொடங்குவதை ஏற்காமல் ஏற்கனவே இருக்கும் கணக்கிலேயே இழப்பீடு வரவு வைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்ததால் குழப்பம் ஏற்பட்டது. இழப்பீடு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.


இந்நிலையில் தற்போது 2017ம் ஆண்டிற்கான இன்சூரன்ஸ் பதிவு தொடங்கியுள்ளது. ஆனால் இதுவரை கிராமங்களில் உள்ள வங்கிகளில் இண்டர்நெட் வசதி சரிவர இல்லை. பெயரளவிற்கு இணைப்பு இருந்தும் அதனால் பயனில்லை.
எனவே உடனடியாக அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் இண்டர்நெட் வசதி செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். விவசாயிகள் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டுகளில் இழப்பீட்டு தொகை வழங்கும்போது சில கூட்டுறவு வங்கிகளில் வங்கி செலவுக்கு என ஐந்து சதவீதம் கமிஷன் தொகையை, விவசாயிகளின் இழப்பீட்டு தொகையில் எடுத்துக்கொண்டனர். இதனால் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைத்தால் இதுபோல் நடக்காது என நினைத்தோம்.
ஆனால் இண்டர் நெட்டை காரணம்காட்டி மீண்டும் வேறு இடத்தில் புதிய கணக்கு தொடங்க நிர்ப்பந்தித்தனர். புதிய கணக்கிற்கான பணம் இழப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனால் அலைச்சலும், செலவும் தான் ஏற்பட்டது. எனவே இந்த ஆண்டும் இதுபோல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் இண்டர்நெட் வசதி செய்ய வேண்டும்’’ என்றனர்.

Tags : insurers ,Internet facility ,banks ,
× RELATED இந்தியாவின் 17 வங்கிகளில் மோசடி செய்து...