×

பாய் நாற்றங்கால் முறையில் விவசாயிகளுக்கு அதிக மகசூல் தரும் நாற்று உற்பத்தி செய்வது எப்படி?

நீடாமங்கலம், ஜூன் 16: விவசாயிகளுக்கு அதிக மகசூல் தரும் பாய் நாற்றங்கால் முறையில் நாற்றுகளை உற்பத்தி செய்வது குறித்து நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலைய ஆராய்ச்சியாளர்கள் ராஜாரமேஷ், பாஸ்கரன் ஆகியோர் கூறியதாவது:
பாய் நாற்றங்கால் என்பது எளிதில் எடுத்து செல்லும் வகையில். வெள்ளை பாலித்தீன் தாளில் மண் பரப்பி நாற்றுகளை  வளர்க்கும் முறையாகும். இதன்படி ஒரு ெஹக்டேர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்வதற்கு 100 சதுர மீட்டர் (2.5 சென்ட்) பரப்பளவில் பாய் நாற்றங்கால் அமைக்க வேண்டும். மேலும், அதனை நல்ல வடிகால் வசதியுடன், நீர் ஆதாரத்திற்கு அருகில் இருக்குமாறு அமைக்கவேண்டும்.
  அத்துடன், 1 மீட்டர் அகலம் 5 செமீ உயரத்துடன் கையாள்வதற்கு தேவையான நீளத்தில் மேட்டு பாத்திகள் அமைக்க வேண்டும். அதனை நீளம் மற்றும் அகல வாக்கில் 4 கட்டங்களாக தடுக்கப்பட்ட 1 மீட்டர் நீளம், 0.5 மீட்டர் அகலம். 4 செமீ உயரம் கொண்ட சட்டம் தயார் செய்து அதனை பாலித்தீன் விரிப்பிற்கு மேல் சரியாக பொருத்த வேண்டும். ஒரு கிலோ வளமான வயல் மண்ணுடன் 1.5 கிலோ பொடியாக்கப்பட்ட டைஅமோனியம் பாஸ்பேட் (டிஏபி) உரத்தை சேர்த்து விரிப்பு சட்டத்திற்குள் முக்கால் அளவிற்கு நிரப்ப வேண்டும். பின்னர் சட்டத்திற்கு 45 கிராம் என்ற அளவில் நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை விதைத்து பின் மண்ணால் நன்கு மூடிவிட வேண்டும்.
இந்த விதைப்பு சட்டத்தின் அடிப்பகுதி வரை நனையும் வகையில் பூவாளியால் தண்ணீர் தெளித்து, பின்னர் விதைப்பு சட்டததை வெளியில் எடுக்கவேண்டும். பிறகு மேட்டு பாத்திகளை வைக்கோலால் மூடிவைக்க வேண்டும். அதனை தொடர்ந்து 5 நாட்கள் வரை பூவாளி உதவியுடன் தண்ணீர் தெளித்து பின் பாதி நனையும் வகையில் தண்ணீர் கட்ட வேண்டும்.
 விதைத்த 9ம் நாள் 0.5 சதவீதம் யூரியா கரைசலை பூவாளி மூலம் மாலையில் தெளிப்பதால் வளமான நாற்றுகளை பெறலாம். 14ம் நாள் சிறிய சட்டத்தில் உள்ள 12 முதல் 16 செமீ உயரமுள்ள நாற்றுகளை பிரித்து எடுத்து வயலுக்கு கொண்டு செல்லலாம். ஒரு ஹெக்டேருக்கு நடவு செய்ய 100 சமீ அளவுள்ள குறைந்த நிலப்பரப்பில் பாய் நாற்றங்கால் அமைத்தால் போதும். மேலும், குறைந்த அளவே விதை தேவைப்படும் என்பதுடன், நீர் தேக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் தேவைப்படும் தண்ணீரின் அளவும் குறையும். இதனை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதும் எளிதாகவே இருக்கும். இந்த முறையில் நாற்றுகளை எளிதில் பிரித்தெடுக்கலாம்.
மேலும், இயந்திரங்கள் மூலம் நடவு செய்ய இந்த நாற்றுகள் ஏதுவானது என்பதுடன், அதிக மகசூல் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags :
× RELATED கணினி இயக்குபவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்