சென்னை : சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர் திருவிழா, இன்று விமரிசையாக நடைபெற்று வருகிறது. விநாயகர், முருகன், கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், சண்டிகேஸ்வரர் உட்பட 5 தேர்கள் வலம் வந்தன. பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா, கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாள் அதிகார நந்தி சேவை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர் திருவிழா இன்று விமரிசையாக நடந்தது.
அதிகாலை, கபாலீஸ்வரர், கற்பகாம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. இதையடுத்து, காலை, 6:00 மணிக்கு தம்பதி சமேதராக, கபாலீஸ்வரர் தேரில் எழுந்தருளினார்.காலை 7:30 மணிக்கு பக்தர்களால் தேர் வடம்பிடிக்கப்பட்டது. பஞ்ச மூர்த்தி புறப்பாட்டுடன் நான்கு மாட வீதிகளிலும் தேரில் கபாலீஸ்வரர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மங்கள வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க தேர் புறப்பட்டபோது கூடியிருந்த பக்தர்கள் தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி, நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.கூடியிருந்த பக்தர்கள் கபாலி..கபாலி என்று பக்தர்கள் எழுப்பிய முழக்கம் விண்ணை எட்டியது.
நண்பகல், 12:00 மணிக்கு தேர் நிலைக்கு வரும். பின், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, தேரில் எழுந்தருளிய கபாலீஸ்வரரை தரிசிப்பர்.கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.அவர்களுக்கு தேவையான உணவுகள், கோடை தாகம் தணிக்க பழச்சாறு, நீர்மோர், பழ வகைகள், பானகம் உள்ளிட்டவற்றை பல்வேறு அமைப்பினர் வழங்கினர்.இதையடுத்து பங்குனி பெருவிழாவின் பிரதான நிகழ்வாக, நாளை, திருஞான சம்பந்தர் அங்கம் பூம்பாவையை உயிர்பித்தல், வெள்ளி விமானத்தில் கபாலீஸ்வரர் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு காட்சியளித்தல் விழா நடக்கிறது.