×

பெகாசசுக்கு போட்டியாக புதிய உளவு மென்பொருள் வாங்க தீவிரம்: ஒன்றிய அரசு ரகசிய நடவடிக்கை

புதுடெல்லி: பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு போட்டியாக புதிய உளவு மென்பொருளை வாங்க ஒன்றிய அரசு ரகசியமாக தீவிர முயற்சி மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலமாக எதிர்க்கட்சி தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் செல்போனை ஒன்றிய அரசு உளவு பார்ப்பதாக கடந்த ஆண்டு கடும் சர்ச்சை எழுந்தது. ஆனாலும் இந்த உளவு மென்பொருளை ஒன்றிய அரசு பயன்படுத்தவில்லை என தொடர்ந்து கூறியது.

இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்டதாக புகார் அளிப்போரின் செல்போன்களை ஆய்வு செய்ய ஒரு குழுவை கடந்த ஆண்டு ஆகஸ்டில் அமைத்தது. அந்த குழுவின் ஆய்வில் பெகாசஸ் ஸ்பைவேர் பயன்படுத்தியதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில், பெகாசசுக்கு போட்டியாக புதிய உளவு மென்பொருளை வாங்க ஒன்றிய அரசு தற்போது திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. சுமார் ரூ.100 கோடி செலவில் உளவு மென்பொருள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான ஏலத்திற்கு அரசு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த ஏலத்தில் குறைந்தது 24க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போதைய நிலையில், புதிய ஸ்பைவேர் ஒப்பந்தங்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சகத்திற்குள் பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. ஆனாலும், முறையான ஏல அறிவிப்பை வெளியிட இன்னும் சிறிது காலமாகும்  என தெரிகிறது. இதனால் உளவு விவகாரம் மீண்டும் தேசிய அரசியலில் சர்ச்சையாக வெடிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

* இஸ்ரேல் நிறுவனங்கள் போட்டாபோட்டி

* பிரிடேட்டர் - இது, சர்வதேச அளவில் பிரபலமான உளவு மென்பொருள் அமைப்பாக உள்ளது. இது கிரீஸ் நாட்டின் தயாரிப்பாக இருந்தாலும், மூளையாக செயல்பட்டவர்கள் இஸ்ரேல் ராணுவ நிபுணர்கள் ஆவர்.

* குவாட்ரீம் - இது இஸ்ரேலிய நிறுவனத்தின் தயாரிப்பு. சவுதி அரேபியாவும் இந்த உளவு அமைப்பை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது.

* காக்னைட் - இதுவும் இஸ்ரேலிய தயாரிப்பு. சமீபத்தில் நார்வே நாட்டின் இறையாண்மையை மீறியதற்காக தடை செய்யப்பட்டது இந்நிறுவனம். இந்தியாவின் ஏலத்தில் இந்நிறுவனங்கள் முக்கிய போட்டியாளர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.



Tags : Rival ,Union Govt Secret , Rushing to Buy New Spyware to Rival Pegasus: Union Govt Secret Operation
× RELATED எட்டயபுரம் அருகே நள்ளிரவில் பயங்கரம்;...