சென்னை: தமிழ்நாடு கடல்சார் வாரியம் சார்பில், ‘‘இந்தியா - இலங்கை நாடுகளுக்கிடையே குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்தினை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்று தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை 2023-24ம் ஆண்டிற்கான, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார். மேலும், 21 புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அவை பின்வருமாறு:
* உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில், ‘‘ஒரு புறவழிச்சாலை அமைத்தல், 23 சாலைகளை அகலப்படுத்துதல், 5 ஆற்றுப்பாலங்கள் 14 சிறுபாலங்கள் கட்டுதல் மற்றும் 9 இடங்களில் மழைநீர் வடிகால்கள் கட்டுதல் ஆகிய பணிகள் ரூ.1093 கோடி மதிப்பில்’’ மேற்கொள்ளப்படும்.
* தொலைதூர சாலைப் பயனாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்காக ‘‘முக்கிய மாநில நெடுஞ்சாலைகளில் 3 இடங்களில் சாலையோர வசதி மையங்கள்’’ பொது மற்றும் தனியார் பங்களிப்பு மூலம் அமைக்கப்படும்.
* ஆறுவழிச்சாலைகள், அதிவேக விரைவுச் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு சாலை மேம்பாட்டுப் பணிகளை விரைந்து செயல்படுத்தவும் பொது மற்றும் தனியார் பங்களிப்பு போன்ற பல்வேறு முறைகளில் பணிகளை செயல்படுத்தவும், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் புத்துயிர் ஊட்டப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்த அமைப்பானது பொது மற்றும் தனியார் பங்களிப்பு போன்ற பல்வேறு முறைகளில் பணிகளை செயல்படுத்தும். இதற்கு தேவைப்படும் சட்ட முன்வரைவுகள் தயாரிக்கப்படும்.
* விபத்தில்லா மாநிலம் என்ற முதலமைச்சரின் கனவை செயல்படுத்த ‘‘பள்ளங்களற்ற சாலை’’ என்ற இலக்கை அடைய வேண்டி உள்ளது. இந்த இலக்கை அடைய, பொது மக்களின் துணையோடு கண்டறியப்பட்ட சாலை பள்ளங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சரி செய்யப்படும். இதற்காக கைப்பேசி செயலி உருவாக்கப்படும். சாலைகளில் உள்ள பள்ளங்கள் மாநில நெடுஞ்சாலைகளில் 24 மணிநேரத்திலும், மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் மாவட்ட இதர சாலைகளில் 72 மணிநேரத்திலும் சரி செய்யப்படும். மேலும், சரி செய்யப்பட்ட புகைப்படம் உடனுக்குடன் கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்படும்.
* நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுக்கு நெருக்கமான பயனர் குழு முறையில், நிரந்தர அலைபேசி எண் வழங்கப்பட்டு அந்த எண் வாயிலாக எந்தவொரு அலுவலரையும் எளிதில் தொடர்பு கொள்ள வழிவகை செய்யப்படும்.
* நெடுஞ்சாலைத்துறையின் திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் ஆய்வு விவரங்களைக் கணினி மயமாக்குதல் மூலம் எளிதாக கண்காணிக்கப்படும். நெடுஞ்சாலைத்துறையில் பல்வேறு அலகுகளின் மூலம் புதிய புறவழிச் சாலைகள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல், போக்குவரத்திற்கு ஏற்ப சாலைகளை அகலப்படுத்துதல், சாலைகளை புதுப்பித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றை கண்காணிக்க, முன்னேற்றத்தை உறுதி மற்றும் ஆய்வு செய்ய “திட்டப் பணிகள் கண்காணிப்பு மற்றும் தகவல் அமைப்பு” என்ற மென்பொருள் மற்றும் ‘கைப்பேசி செயலி’ உருவாக்கப்படும். இதனால் திட்டங்கள் வெளிப்படை தன்மையோடும் கண்காணிக்கப்படும்.
* தரமான சாலைகளை அமைக்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு சாலையின் மேடு பள்ளங்கள் இணைய ஆய்வு வாகனம் கொண்டு கண்டறியப்படும். இவ்வாறான தரப்பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னரே, பணி நிறைவுச் சான்றிதழ் அளிக்கப்படும். புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் மேடு பள்ளங்கள் தற்பொழுது ‘கேம்பர் போர்டு’ போன்ற சாதனங்களை கொண்டு ஆய்வு செய்யப்படுகிறது. இணைய ஆய்வு வாகனம் கொண்டு ஒருங்கிணைப்பு சோதனை மூலம் சாலையின் சீரற்ற தன்மை கண்டறியப்படும்.
* மாநில நெடுஞ்சாலைத்துறையின் சாலை பணிகளை விரைந்து முடிக்க முதற்கட்டமாக, நெடுஞ்சாலைத்துறையின் 12,291 கி.மீ. மாநில நெடுஞ்சாலைகளில் நில எல்லை அளவு மற்றும் மரங்கள், சாலை உபகரணங்கள் உள்ளிட்ட சொத்துக்களின் விவரங்கள் கணினிமயமாக்கப்படும்.
* கலைஞரின் நூற்றாண்டை ஒட்டி, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். இதனால் மாநில நெடுஞ்சாலைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளர்க்கப்படும் என்ற இலக்கு எட்டப்படும். மேலும், மண் அரிப்பை தவிர்க்கும் பொருட்டு பனை விதைகள் ஊன்றப்படும்.
* முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில், 13.30 கி.மீ. நீள ஈரோடு வெளிவட்ட சுற்றுச் சாலை உள்ளிட்ட 200 கி.மீ சாலைகள் நான்கு வழித்தடமாகவும், 600 கி.மீ. சாலைகள் இரு வழித்தடமாகவும் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும். 2021 - 2022ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாவட்டத் தலைமையிடங்கள் மற்றும் தாலுகா தலைமையிடங்களை இணைக்கும் மாநில நெடுஞ்சாலைகள், அடுத்த 10 ஆண்டுகளில் 2200 கி.மீ. சாலைகளை நான்கு வழித்தடச் சாலைகளாகவும் மற்றும் 6700 கி.மீ. சாலைகளை இரண்டு வழித்தடச்சாலைகளாகவும் அகலப்படுத்தப்படும்.
* காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 ஆற்றுப் பாலங்கள் கட்ட ரூ. 50 லட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
* ரூ..150 கோடி மதிப்பில் சாலை பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மலைப்பகுதிகளில் உள்ள கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் ஆபத்தான வளைவு பகுதிகளில் வெளிநாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருளை விபத்து தடுப்பான்கள் ரூ.100 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.
* அனைத்து காலநிலைகளிலும் தங்கு தடையற்ற போக்குவரத்து என்ற முதலமைச்சரின் முத்தாய்ப்பான திட்டத்தின் கீழ் 273 தரைப்பாலங்கள் உயர்மட்டப் பாலங்களாக ரூ. 787 கோடி மதிப்பில் கட்டப்படும். நடப்பாண்டில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் 29 மாவட்டங்களில் 200 தரைப்பாலங்கள் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலங்களாக கட்டப்படும். நபார்டு வங்கி கடனுதவியுடன் 20 மாவட்டங்களில் 73 தரைப்பாலங்கள் ரூ.487 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலங்களாக கட்டப்படும்.
* மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு அரங்கிற்கு செல்லும் சாலை ரூ. 22.80 கோடி மதிப்பில் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும். ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் சுற்றுலாப் பகுதிகளுக்கு செல்ல புறவழிச் சாலைகள் அமைக்க ரூ.88 லட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
* தமிழ்நாடு கடல்சார் வாரியம் இந்தியா - இலங்கை நாடுகளுக்கிடையே குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்தினை ராமேஸ்வரம்-தலைமன்னார் (50கி.மீ) ராமேஸ்வரம்-காங்கேசன்துறை (100 கி.மீ) ஆகிய வழித்தடங்களில் துவக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறான புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
* தமிழர்களின் உள்ளங்களை கவர்ந்தவர் உதயநிதி
தந்தை பெரியாரின் புகழ்பாடும் ஈரோடு பெருநகரமே, இடமின்றிச் சிறு நகரமானது. அங்கு உதயநிதி படையெடுப்பால், எதிரிகள் அச்சம் உற்றனர். அன்று, ஒற்றைச்செங்கல் காட்டி ஆட்சி கட்டிலில் அமர காரணமாய் திகழ்ந்தார். இன்று, ஒரே ஒரு படத்தைக் காட்டி (கலைஞர் நூலகம்) ஈரோட்டில் வெற்றி கொடி நாட்டி கழகத்திற்கு பெருமை சேர்த்தார். 234 தொகுதிகளிலும் இளைஞர் அணி சார்பில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை நடத்தி இளைஞர்களின் இதங்களை ஈர்த்து தமிழர்களின் உள்ளங்களை கவர்ந்தவர் உதயநிதி என்று பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
* ‘முதல்வர் வள்ளலாரை போன்றவர்’
சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ’’சாலைத் திட்டத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. நமது முதல்வர், பகைவருக்கும் அருள் புரியும் பண்புள்ளவர், வள்ளலார் மாதிரி. இந்தத் தொகுதி, அந்தத் தொகுதி என்ற பாகுபாடு கிடையாது. உதாரணத்துக்கு, முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் கடந்த 2 ஆண்டு காலத்தில் எடுக்கப்பட்ட கணக்கில் 44 சதவீத பணிகள் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதியில்தான் நடைபெற்று வருகிறது’’ என்றார்.
234 தொகுதிக்கும் ஒரே மாதிரியான அளவில் திட்டங்கள்
‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளை செயல்படுத்த முதல்தற்கட்டமாக ரூ.1093 கோடி மதிப்பில் பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். எப்போதும் ஆளும் கட்சி என்றால் தன்னுடைய கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் என்ன வேண்டும் என்று கேட்பதும் அல்லது தோழமை கட்சிகளிடம் குறித்து கேட்பதுதான் வாடிக்கையாக இருந்துள்ளது.
234 தொகுதிகளிலும் உங்கள் தொகுதிக்கு வேண்டியதை கொடுங்கள் என்று சொல்லி அதற்கு முன்னிலை கொடுக்க வேண்டும் என்ற திட்டம்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான முதலமைச்சரை பெற்றுள்ளதால்தான் சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.1093 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி 23 சாலைகளை அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், 5 ஆற்றுப்பாலங்கள், 14 சிறுபாலங்கள் கட்டுதல் மற்றும் 9 இடங்களில் மழைநீர் வடிகால்கள் கட்டுதல் ஆகிய பணிகள் ரூ.1093 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.