×

ஏப்.1 முதல் குடிநீர் கட்டண நுகர்வோர் அட்டை இல்லை: சென்னை குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: குடிநீர் கட்டணங்களை செலுத்தும் வகையில் முன்பு புழக்கத்தில் இருந்த குடிநீர் அட்டை திட்டம்,  ஏப்.1ம் தேதி முதல் செயல்படுத்தப்படாது. இதனால், நுகர்வோருக்கு அட்டை வழங்கப்படாது என சென்னை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை குடிநீர் வாரிய நுகர்வோர் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்துவதை டிஜிட்டல் கட்டண முறையில் ஊக்குவிக்கவும், வரிசையில் காத்திருக்கும் நேரத்தைத் தவிர்க்க மற்றும் காகிதப் பயன்பாட்டை குறைக்கவும் வரும் ஏப்ரல் 1ம் தேதி (நாளை) முதல் நுகர்வோர் அட்டை வழங்கப்படாது. மேலும், ஏற்கனவே உள்ள நுகர்வோர் அட்டையில் எந்த பதிவும் செய்யப்படாது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

நுகர்வோர்களுக்கு 5 வருடங்களுக்கு ஒருமுறை நுகர்வோர் அட்டை சென்னை குடிநீர் வாரியத்தால் வழங்கப்படுகிறது. அதன்படி 2024-25ம் ஆண்டு வரையிலான கால கட்டத்துக்கு அனைத்து நுகர்வோர்களுக்கும் நுகர்வோர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியம், குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை வசூலிக்கும் முறையினை நவீன இணைய அமைப்பிற்கேற்ப மேம்படுத்தியுள்ளது.  இந்த இணைய வழியிலான கட்டண நுழைவாயிலை பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாக செலுத்தலாம். மேலும், யுபிஐ, க்யூஆர் குறியீடு மற்றும் பிஓஎஸ் போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர் தங்களின் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, கட்டணங்களை செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணைய வசதி மூலம் நுகர்வோர் தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை தெரிந்துகொள்ளவும், பணம் செலுத்தும் ரசீதினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் இயலும்.  எனவே, நுகர்வோர்களுக்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி (நாளை) முதல் புதிதாக நுகர்வோர் அட்டை வழங்கப்படமாட்டாது. மேலும், ஏற்கனவே உள்ள நுகர்வோர் அட்டையிலும் பணம் செலுத்தப்பட்டதற்கான எந்த பதிவும் செய்யப்பட மாட்டாது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.




Tags : Chennai Water Board , No water tariff consumer card from April 1: Chennai Water Board Information
× RELATED கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னையில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல்..!!