×
Saravana Stores

அண்ணாமலைக்கு செக்!: தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக நீடிக்கிறது.. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்..!!

டெல்லி: தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக நீடிப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.  பாஜக - அதிமுக உறவில் விரிசல் என கூறப்பட்ட நிலையில், செய்தியாளர்களுக்கு அமித்ஷா அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு, தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜக கட்சி கட்டமைப்பு வலுவாக இல்லை. அதை மேம்படுத்த உழைத்து வருகிறோம். தொலைதூர கிராமங்களையும், வாக்குச்சாவடிகளையும் பாஜக எட்டியுள்ளது. நாங்கள் வலு குறைவாக இருக்கும் இடங்களில் கூட்டணி கட்சிகள் கை கொடுக்கும்.

அந்த வகையில் அதிமுக கூட்டணியில் நீடிக்கிறோம் என்று அமித்ஷா குறிப்பிட்டார். பாஜகவின் முக்கிய அதிகார மையமாக இருக்கும் அமித்ஷா அதிமுகவுடன் தான் கூட்டணி என உறுதி செய்திருப்பது அரசியல் அரங்கில் கவனிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிமுக - பாஜக கூட்டணியில் பிளவு இல்லை என்பதை அமித்ஷா உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக, மெகா கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்; கூட்டணியில் பாஜக தொடரும் என கூறவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பின் பாரதிய ஜனதா உடன் எடப்பாடி பழனிசாமி நெருக்கம் காட்டவில்லை. பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று ஒரே ஓர் இடத்தில் மட்டும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். பாஜகவுடன் நெருக்கமாக இருப்பதாக வேறு எங்கும் எடப்பாடி காட்டிக் கொள்ளவில்லை.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக ஒன்று சேராததே தோல்விக்கு காரணம் என அண்ணாமலை கூறினார். பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார் அதிமுகவில் இணைந்ததை அண்ணாமலை விமர்சித்தார். அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துவிட்டு நிர்மல்குமார் அதிமுகவில் ஐக்கியமானது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிமுகவினர் பாஜகவில் இணைந்தபோது இனித்தது; பாஜகவினர் அதிமுகவில் இணைவது கசக்கிறதா என செல்லூர் ராஜுவும் பதிலடி தந்தார்.

மத்தியில் ஆளும் கட்சி என்ற திமிரில் பாஜகவினர் நடந்துகொள்ளக்கூடாது என்றும் செல்லும் ராஜு கடுமையாக விமர்சித்திருந்தார். நான் கருணாநிதி, ஜெயலலிதா போன்று பெரிய தலைவர் என அண்ணாமலை பேசினார். கட்சித் தலைவர்கள் எல்லாம் தலைவர்கள் ஆகிட முடியாது என்று அதிமுக தாக்கியது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசியத் தலைவர் கூறினால் பதவி விலகுவேன் என்றும் அண்ணாமலை பேசினார். திராவிடக் கட்சிகளுடன் சேர்ந்து எந்த தேர்தலையும் சந்திக்க விரும்பவில்லை என அண்ணாமலை பேசியிருந்தார். இதனால் அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதோ என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக நீடிப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.


Tags : Annamalai ,BJP ,AIADMK ,Tamil Nadu ,Union Home Minister ,Amit Shah , Tamil Nadu, ADMK alliance, BJP, Amit Shah interview
× RELATED பருவமழையை பாதிப்பின்றி எதிர்கொள்வோம்: பாஜ தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்