- முதல் அமைச்சர்
- உர்காவல் படை
- சென்னை
- முதலமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கே. ஸ்டாலின்
- தமிழ்நாடு காவல் படை
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13.1.2026) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில், தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் சேர்க்க தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட 50 திருநங்கையர்களுக்கு ஊர்க்காவல்படை உறுப்பினர் நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 திருநங்கையர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கினார்.
2025-2026-ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட உரையில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்களால், திருநங்கையருக்கு உரிய விழிப்புணர்வையும், வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பையும் வழங்குவதன் மூலம் அவர்களுடைய கண்ணியமான வாழ்வினை உறுதி செய்திட முடியும் என்று இந்த அரசு உறுதியாக நம்புகிறது. இந்த உயர் நோக்கத்தினை முன்னிறுத்தி, ஓர் முன்னோடி முயற்சியாக திருநங்கையர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கி ஊர்க்காவல் படையில் ஈடுபடுத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 50 திருநங்கைகளைக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, காவல்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரின் பரிந்துரையில், ஊர்க்காவல்படை – காவல்துறை தலைவரால் 50 திருநங்கைகளை தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் உறுப்பினராக நியமிக்க பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களுக்கு ஊர்க்காவல்படை உறுப்பினர் நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக சென்னை பெருநகர காவல் ஆணையரகம், ஆவடி மற்றும் தாம்பரம் ஆகிய காவல் ஆணையரகங்களிலிருந்து 7 திருநங்கையர்களுக்கு ஊர்க்காவல்படை உறுப்பினர் நியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் வழங்கினார்.
முதற்கட்டமாக தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் சென்னையில் 5 நபர்கள், தாம்பரத்தில் 15 நபர்கள், ஆவடியில் 10 நபர்கள், மதுரையில் 7 நபர்கள், கோயம்புத்தூரில் 7 நபர்கள் மற்றும் திருச்சிராப்பள்ளியில் 6 நபர்கள், என மொத்தம் 50 திருநங்கைகள் காவல் துறையுடன் இணைந்து போக்குவரத்து மேலாண்மை, திருவிழாக் காலங்களில் கூட்டநெரிசலைக் கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில் உரிய பயிற்சிகள் வழங்கி ஊர்க்காவல் படையில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், காவல் துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் (பொறுப்பு) க.வெங்கடராமன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை முதன்மைச் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் குடிமை பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல்படை தலைவர் வே.ஜெயஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டனர்.
