×

ஆவடி அருகே பரபரப்பு ரத்த வாந்தி எடுத்து ஜிம் மாஸ்டர் திடீர் மரணம்: இரண்டு கிட்னி செயலிழப்புக்கு ஸ்டீராய்டு மருந்து காரணமா?

சென்னை: ஆவடி அருகே ரத்த வாந்தி எடுத்து ஜிம் மாஸ்டர் சுருண்டு விழுந்து பலியானார். இரண்டு கிட்னியும் செயல் இழந்த நிலையில் அவர் தடை செய்யப்பட்ட ஸ்டீராய்டு மருந்து பயன்படுத்தியதுதான் காரணம் என கூறப்படுகிறது. ஆவடி அடுத்த நெமிலிச்சேரியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் சபரி முத்து (எ) ஆகாஷ் (25). நடுகுத்தகை என்ற இடத்தில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் ஜிம் மாஸ்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஆகாஷ் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

இதனால், மாநில அளவிலான போட்டியில் பங்குபெற்று வெற்றிப்பெற வேண்டும் என கடுமையாக பயிற்சி எடுத்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து, கடந்த 22ம் தேதி வீட்டில் இருந்தபோது திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். உடனே, அவரை தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு கிட்னியும் செயல் இழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த ஆகாஷ், சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார். கடந்த 26ம் தேதி நடந்த ஆணழகன் போட்டியில் கலந்துகொண்ட ஆகாஷ், அதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்துள்ளார்.

இந்நிலையில், அரசின் தடை செய்யப்பட்ட ஸ்டீராய்டு ஊசி பயன்படுத்தியதாகவும், இதனால், இரண்டு கிட்னியும் செயலிழந்த ஆகாஷ் உயிரிழந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறியதாவது: அனபோலிக் ஸ்டீராய்டுகள் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரானின் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்யும் மருந்துகள். ஹார்மோன் பற்றாக்குறை அல்லது குறைபாடு உடையவர்களுக்கு மருந்துகள் குறைந்த அளவு பயன்படுத்தும் வகையில் அறிவுறுத்தப்படும். ஆனால், சில விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆணழகன் போட்டியில் பங்கேற்பவர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் வகையில் மருத்துவரின் அறிவுறுத்தல் இல்லாமல் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், கொழுப்பை குறைக்கவும் மற்றும் செயல்திறன் அதிகரிக்கும் மருந்தாக உடற்பயிற்சி மேற்கொள்ளுபவர்கள் பயன்படுத்துகின்றனர். இயல்பாக உடலின் மெட்டாபாலிசத்தில் மாறுபாடுகளை ஏற்படுத்தும்.

இந்த ஸ்டீராய்டு மருந்தை பயன்படுத்துவதால் கைகள் மற்றும் தோள்பட்டை பகுதிகளில் உள்ள தசைகள் பெரிதாகவும், மார்பு பகுதியில் உள்ள தசைகள் குறுகிய நிலையிலும் காணப்படும். இந்த ஸ்டீராய்டு மருந்தை பயன்படுத்துவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகும் வகையில் தாங்கள் ஆணா, பெணா என்ற சந்தேகங்கள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இந்த மருந்தை பயன்படுத்தினால் வயிற்று பகுதியில் புண்கள் ஏற்பட்டு ரத்த வாந்தி எடுத்து உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால்தான் ஸ்டீராய்டு மருந்து தடை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Sudden death of gym master who vomited blood near Aavadi: Steroids to blame for two kidney failures?
× RELATED ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண்...