துபாய்: இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணி பங்கேற்கும் போட்டிகள், வேறு நாட்டில் நடத்தப்படவே வாய்ப்புகள் அதிகம் என ஐசிசியின் பொது மேலாளர் வாசிம் கான் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் 13வது 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. நடப்பாண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கும் எனவும் இறுதிப் போட்டி நவம்பர் 19ம் தேதி நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உலகக்கோப்பை போட்டிகளுக்காக சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட 12 இடங்களை பட்டியலிட்டுள்ளதாகவும், இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
நடப்பாண்டிற்கான ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. ஆசிய கோப்பை தொடரில் விளையாட, இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்த நிலையில், இந்தியாவில் நடக்கவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் விளையாட, பாகிஸ்தான் அணி இந்தியா வர வாய்ப்புகள் குறைவு என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணிக்கான லீக் போட்டிகள் மட்டும் UAE-ல் நடைபெறும் எனவும் மற்ற போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானிலேயே நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஒரு வேளை இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றால், அந்த போட்டியும் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே நடைபெறும் என, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணி பங்கேற்கும் போட்டிகள், வேறு நாட்டில் நடத்தப்படவே வாய்ப்புகள் அதிகம் என ஐசிசியின் பொது மேலாளர் வாசிம் கான் தெரிவித்துள்ளார்.