×
Saravana Stores

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆஸி. வீரர் மேத்யூ வேடு ஓய்வு

சிட்னி: ஆஸ்திரலேிய கிரிக்கெட் அணியின் முன்வரிசை பேட்ஸ்மேன்/விக்கெட் கீப்பர் மேத்யூ வேடு (36 வயது), சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்காக முதலில் யு19 அணியில் விளையாடிய மேத்யூ 2011ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமானார். தொடர்ந்து 2012ல் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரிலும், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டெஸ்ட் தொடரிலும் சர்வதேச களத்தில் அறிமுகமானார்.

சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு முன்பே ஐபிஎல் தொடரில் (2011) டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார். ஐபிஎல் போன்று பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் என பல்வேறு நாடுகளின் உள்நாட்டு டி20 தொடர்களிலும் மேத்யூ விளையாடி வருகிறார்.சமீபத்தில் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடந்த டி20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸி. அணியிலும் மேத்யூ இடம் பெற்றிருந்தார். அதில் இந்தியாவுக்கு எதிரான பைனலில் விளையாடியதுதான் அவரது கடைசி சர்வதேச ஆட்டமாகும். டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் 2021க்கு பிறகு மேத்யூவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் மார்ச் மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில், தனது ஓய்வை திடீரென அறிவித்துள்ளார். இதை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் உறுதி செய்துள்ளது. நவ.4ம் தேதி தொடங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில், ஆஸ்திரேலியா அணியின் பயிற்சிக்குழுவில் மேத்யூ இணைகிறார். இது குறித்து மேத்யூ, ‘சர்வதேச ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து 6 மாதங்களாக யோசித்து வந்தேன். எனது மனைவியும், குழந்தைகளும் எனக்காக செய்த தியாகம் போதும் என்று நினைக்கிறேன். அதனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகிகள், மூத்த வீரர்களுடன் ஆலோசித்து தான் இந்த ஓய்வு முடிவை எடுத்தேன்.

பயிற்சியாளர் பணியில் ஈடுபட்டாலும், ஆஸி.யின் பிக் பாஷ் உட்பட உள்நாட்டு டி20 தொடர்களில் தொடர்ந்து விளையாடுவேன்’ என்று கூறியுள்ளார். அதனால் ஐபிஎல் தொடரிலும் களம் காணக்கூடும். இதுவரை 36 டெஸ்ட்களில் விளையாடி 1613 ரன் (அதிகம் 117, சராசரி 29.87, சதம் 4, அரை சதம் 5), 97 ஒருநாள் போட்டிகளில் 1867 ரன் (அதிகம் 100*, சராசரி 26.29, சதம் 1, அரை சதம் 11) மற்றும் 92 டி20ல் 1202 ரன் (அதிகம் 80, சராசரி 26.13, அரை சதம் 3) எடுத்துள்ளார். விக்கெட் கீப்பர் பணியில் ஒட்டுமொத்தமாக 240 கேட்ச் மற்றும் 26 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

The post சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆஸி. வீரர் மேத்யூ வேடு ஓய்வு appeared first on Dinakaran.

Tags : Matthew Wade ,Sydney ,cricket ,Matthews ,Australia ,U19 team ,T20 ,South Africa ,Dinakaran ,
× RELATED சிட்னி முருகன் கோயிலில் தீபாவளி கொண்டாடிய ஆஸ்திரேலிய பிரதமர்