×

கள்ளிக்குடி அருகே களப்பலி நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு

திருமங்கலம் : கள்ளிக்குடி அருகே திருமால் கிராமத்தில் களப்பலி நடுகல் சிற்பம் தொல்லியல் கள ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகேயுள்ள திருமால் கிராமத்தில் பழமையான சிற்பங்கள் ஒரே இடத்தில் இருப்பதாக நாகரத்தினம் அங்காளம்மாள் கலை அறிவியல் கல்லூரி மாணவர் சிலம்பரசன், அக்கல்லூரியின் வரலாற்று துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதை தொடர்ந்து அக்கல்லூரியின் வரலாற்று துறை உதவி பேராசிரியர் தாமரைக்கண்ணன், பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் தர் ஆகியோர் அக்கிராமத்தில் களஆய்வு மேற்கொண்டனர். இவை நாயக்கர் காலத்து சிற்பங்கள் என தெரியவந்தது.

இதுகுறித்து தொல்லியல் களஆய்வாளர்கள் கூறியாவது: ‘திருமால் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் மூன்றடி உயரமும், இரண்டடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிறப்பமாக செதுக்கப்பட்டுள்ளது. சிற்பத்தில் ஒரு மனிதத்திருமேனியும், பன்றியின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. பன்றி என்பது முப்பலிகளில் ஒன்றாகும். நம் முன்னோர்கள் நெடுங்காலமாக சேவல், ஆடு, பன்றி என முப்பலிகளை கொடுத்து வந்துள்ளனர். இந்த வகையை சேர்ந்ததுதான் இந்த சிற்பம்.

இந்த சிற்பத்தில் மனித உருவமும் இடம் பெற்றுள்ளது. இவர் ஓர் அரவான் என தெரியவந்துள்ளது. இந்த சிற்பத்தில் உள்ள நபர் ஊரின் நலன் கருதியோ அல்லது நாட்டின் நலன் கருதியோ, போரில் வெற்றி பெற வேண்டியோ தனது உயிரை துச்சமாக கருதி தானே முன்வந்து களப்பலி கொடுத்துள்ளார். இதுவே அரவான் களப்பலியாகும். இதற்கு எடுத்துக்காட்டாக மகாபாரதத்தில் அரவான் தனது உயிரிரை கொற்றவைக்கு களப்பலி கொடுத்ததேயாகும். இதுபோன்ற சிற்பம் தமிழகத்தில் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சிற்பத்தில் உள்ள அரவான் வணங்கியபடி வேண்டுதலினை நிறைவேற்ற தயாராக உள்ளது போல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அரிதான ஒன்றாகும்.

சதிகல் 1: இந்த சிற்பமும் இதே இடத்திலேயே காணப்படுகிறது. இரண்டரை அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதில் ஓர் ஆண், பெண் உள்ளனர். ஆணின் வலது கையில் கத்தியை உயர்த்தி பிடித்தும், இடது கையில் கேடயத்தை பிடித்தபடியும், இடையில் குருவாள் செருகியபடியும், தலையில் இடப்புறம் சரிந்த கொண்டையுடன் மார்பில் அணிகலன்களுடன் இடையில் இடைக்கட்சையணிந்து கால்களில் வீரகழலையுடன் கம்பீரமாக நின்ற கோலத்தில் வீரன் காட்சியளிக்கிறார்.

இந்த வீரன் போரில் வீரமரணம் அடைந்திருக்க வேண்டும். மனைவி உடன்கட்டை ஏறி இருக்க வேண்டும். ஆகவே இந்த சதிகல் இருவரின் நினைவாக நட்டு வைத்துள்ளனர். உடன்கட்டை ஏறுவதை சில பெண்கள் ஏற்க மறுத்ததால் அப்பெண்களை கட்டாயமாக தீயில் இட்டு உள்ளனர் என்பதனை விளக்கும் விதமாக இந்த சிற்பத்தில் உள்ள பெண் தனது இடது கையில் ஒரு குடுவையை பிடித்தவாறு கால்கள் இரண்டையும் இறுககட்டியவாறும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தின் வடிவமைப்பை பார்க்கும் போது மற்ற சிற்பங்களை விட காலத்தால் முற்பட்ட 16ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம்.

சதிகல் 2: இந்த சிற்பம் மூன்றடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்டதாகும். தலைக்கு மேல் நாசிக்கூடு செதுக்கப்பட்டுள்ளது. வீரன் தனது வலது கையில் வாளினை உயர்த்தி பிடித்தபடி, இடையில் குறுவாளை வைத்தபடியும் காட்சியளிக்கிறார். அருகே வீரனின் மனைவியின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

சதிகல் 3: இந்த சிற்பங்களின் அருகே மற்றொரு சதிகல் சிற்பம் இடம் பெற்றுள்ளது. வீரன் கைகளில் வாளினை உயர்த்தியபடியும், மனைவி மலர் செண்டை உயர்த்தியபடியும், இருவரின் இடது கைகள் தொடையில் இருக்கும்படியும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் முறையான களஆய்வு மேற்கொண்டால் திருமால் கிராமத்தின் தொன்மையான வரலாற்றையும், பண்டைய தமிழர்களின் வாழ்வியலையும் அறிய முடியும். இவ்வாறு கூறினர்.

Tags : Kalappali Middle Stone ,Kallikudi , Thirumangalam: Kalappali mid-stone sculpture has been discovered by archeologists in Tirumal village near Kallikudi.
× RELATED மாவட்ட கலெக்டர் தலைமையில் பழங்குடியின மக்களுடன் சமத்துவ பொங்கல் விழா