நீலகிரியில் 64 ரேஷன் கடைகளுக்கு ஐஎஸ்ஓ சர்வதேச தரச்சான்று

*க்யூஆர் கோட் மூலம் பணம் செலுத்தும் முறை

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் 64 ரேஷன் கடைகளுக்கு ஐஎஸ்ஓ  எனப்படும் சர்வதேச தரச்சான்று பெறப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. இக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு,கோதுமை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இதுதவிர பொதுமக்களுக்கு உணவு பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில் சிறப்பான, தரமான சேவை வழங்குவதற்கான நம்பகதன்மையை ஏற்படுத்த, சீரமைக்கப்பட்ட, நல்ல நிலையில் உள்ள தரமான சேவை வழங்கி வரும் ரேஷன் கடைகளுக்கு சர்வதேச தரச்சான்று பெற கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதன்படி தொழிலின் தரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஐஎஸ்ஓ- 9001 மற்றும் பாதுகாப்பு மேலாண்மை மற்றும் விநியோகத்தின் சிறந்த செயல்பாட்டிற்கான ஐஎஸ்ஓ- 28000 என இருவகை தர சான்றிதழ் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் ரேஷன் கடைகளுக்கு சர்வதேச தர சான்று பெறும் பணியில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், குந்தா, கோத்தகிரி, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய 6 தாலுக்காக்களில் கூட்டுறவுத்துறை சார்பில் 335 ரேசன் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கட்டுபாட்டில் 28 கடைகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், எஸ்டேட் நிர்வாகத்தினரால் நடத்தப்படும் கடைகள் என மொத்தம் 404 ரேசன் கடைகள் இயங்கி வருகின்றன.

இவற்றில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 148 குடும்ப அட்டைகள் உள்ளன. தற்போது மொத்தம் 64 ரேசன் கடைகள் ஐஎஸ்ஓதரசான்று பெற்றுள்ளன. இதன்படி கேஷ்பஜார், மினிசூப்பர் மார்க்கெட், வண்டிபேட்டை, வண்ணாரபேட்டை, அப்பர் குன்னூர் பழையது, அப்பர் குன்னூர் புதியது, ஓட்டுபட்டறை, வசம்பள்ளம், வெலிங்டன், ஜேயந்திநகர், கூர்க்கா கேம்ப், ஊட்டி மார்க்கெட் போஸ்ட்-1, மார்க்கெட் போஸ்ட்-2, காந்தல்-1, காந்தல்-2, பிங்கர்போஸ்ட்-1, பிங்கர்போஸ்ட்-2, கோடப்பமந்து, பெர்ன்ஹில், மஞ்சனக்கொரை, மசினகுடி-2, சூப்பர் மார்க்கெட்-2, கூடலூர்-1, சேரங்கோடு, டென்ட்ஹில், காந்திபுரம், சேலாஸ், பென்காம், வாழைத்தோட்டம், பேரட்டி, சூப்பர் மார்க்கெட்-1, நடுவட்டம், கொணவக்கரை, அரவேனு, அப்பர் கோத்தகிரி, கன்னேரிமுக்கு, கொழிக்கரை, கொட்டகொம்பை, ரயில்வே கூட்டுறவு கடை, கவரட்டி, ஆடாசோலை, லாரன்ஸ், தலைக்குந்தா, எம்.பாலாடா, கப்பத்தொரை, கார்டைட் பேக்டரி கூட்டுறவு கடை, கோபாலபுரம்-1, கோபாலபுரம்-2, ஜெகதளா சாலை, காரக்கொரை, ஒசஹட்டி, அணிக்கொரை, தேனாடுகம்பை, எப்பநாடு, தொரைசால், சின்னகுன்னூர் மற்றும் குஞ்சப்பனை, மரகல், கெங்கமுடி, பெந்தட்டி ஆகிய பகுதி நேர கடைகள் என மொத்தம் 60 கடைகளுக்கு ஐஎஸ்ஒ 9001:2015 தரச்சான்று பெறப்பட்டுள்ளன.

முத்தோரை, தாய்ேசாலை, தூனேரி, எல்லக்கண்டி ஆகிய 4 ரேஷன் கடைகளுக்கு ஐஎஸ்ஒ 28000:2022 தர சான்றிதழும் பெறப்பட்டுள்ளன. மீதமுள்ள கடைகளுக்களின் தரத்தை மேம்படுத்தி அனைத்து கடைகளுக்கும் தர சான்று பெற திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:  நீலகிரி மாவட்டத்தில் 56 முழு நேர ரேசன் கடைகள், 4 பகுதி நேர கடைகள் என 60 கடைகளுக்கு ஐஎஸ்ஓ 9001:2015 தரச் சான்றிதழும், 4 ரேசன் கடைகளுக்கு ஐஎஸ்ஓ 28000:2022 தர சான்றிதழும் பெறப்பட்டுள்ளன.

 பொதுமக்களுக்கு தேவையான தரமான மளிகை பொருட்களை விநியோகித்தல், அரசு அறிவித்த அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களுக்கு முறையாக விநியோகம் செய்தது மற்றும் கடையின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் இச்சான்று பெறப்பட்டுள்ளது.சோதனை முயற்சியாக மாவட்டத்தில் சில ரேஷன் கடைகளில் க்யூஆர் கோட் மூலம் பணம் செலுத்தி அத்தியாவசிய பொருட்கள் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் ஏப்ரல் முதல் அனைத்து கடைகளுக்கும் இவ்வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: