கோயில் திருவிழா கறிவிருந்தின்போது தாக்கியதால் அதிமுக பிரமுகரை கத்தியால் வெட்டி கொலை செய்தோம்: கைதான 4 பேர் பரபரப்பு வாக்குமூலம்

ஸ்ரீபெரும்புதூர்: கோயில் திருவிழா கறிவிருந்தின்போது எங்களை தாக்கியதால், அதிமுக பிரமுகரை கத்தியால் சரமாரியாக வெட்டி  கொலை செய்தோம் என கைதான 4 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும், தலைமறைவான 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியை  சேர்ந்தவர் நாகராஜ் (41). அதிமுகவில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய ஜெயலலிதா  பேரவை இணை செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர், கடந்த 25ம் தேதி இரவு  தனது நண்பர்களான விஜயகாந்த், கண்ணன் உள்ளிட்ட 4 பேருடன் கிளாய் பகுதியில்  உள்ள தனியார் குடியிருப்புக்கு சென்று மது அருந்தியுள்ளார். அப்போது,  மதுபானம் தீர்ந்துவிட்டதாக கூறி, விஜயகாந்த், கண்ணன் ஆகியோரை டாஸ்மாக்  கடையில் மதுவாங்கி வரும்படி அனுப்பி வைத்துள்ளார்.

அதன்படி, இருவரும்  மது வாங்கிக்கொண்டு திரும்பி வந்துள்ளனர். அப்போது கழுத்து, வயிறு உள்ளிட்ட  பகுதிகளில் பலத்த வெட்டு காயங்களுடன் நாகராஜ் கொலை செய்யப்பட்டு  கிடந்துள்ளார். இதையடுத்து, அதிர்ச்சியடைந்த இருவரும் உடனடியாக  ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார்  சம்பவ இடத்திற்கு வந்து நாகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில்  நாகராஜியுடன் மது அருந்திய 4 பேரும் தலைமறைவாக இருந்தது போலீசாருக்கு  சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கிளாய் பகுதியை சேர்ந்த  செல்வகுமார், விஜய், ரெட் கார்த்தி, மணிகண்டன் ஆகியோரை பிடித்து  விசாரித்தனர். இதில், கடந்த மாதம் கிளாய் பகுதியில் உள்ள எல்லேரி அம்மன்  கோயில் திருவிழா நடந்துள்ளது. இதனை அதிமுகவை சேர்ந்த நாகராஜ் முன்நின்று  நடத்தியுள்ளார். திருவிழா இறுதி நாளன்று கறிவிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது, செல்வகுமார், விஜய், மணிகண்டன் உள்ளிட்டோர் மதுபோதையில்  நாகராஜிடம், கறிகேட்டு ஆபாசமாக திட்டி தகராறு செய்துள்ளனர். இதனால்,  ஆத்திரமடைந்த நாகராஜ் தனது ஆதரவாளர்களுடன் செல்வகுமாரை சரமாரியாக  தாக்கியுள்ளார். இதனால், நாகராஜிக்கும் செல்வகுமாரின் நண்பர்களுக்கும்  முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

சம்பவத்தன்று நாகராஜ், விஜயகாந்த்,  கண்ணன் உள்ளிட்டோருடன் மது அருந்துவதை செல்வகுமார் பார்த்துள்ளார்.  சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொண்ட செல்வகுமார், விஜய், ரெட் கார்த்தி,  மணிகண்டன் ஆகிய 4 பேரும் கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன்  நாகராஜை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது தெரியவந்துள்ளது.  மேற்கண்ட விவரங்களை போலீசாரிடம் வாக்குமூலமாக 4 பேரும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து,  கைது செய்யப்பட்ட 4 பேரையும் பெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  போலீசார் சிறையில் அடைத்தனர். தலைமறைவான 2 பேரை போலீசார் தேடி  வருகின்றனர்.

Related Stories: