தேனியில் மேகமலை வனஉயிரின கோட்ட கட்டுமானப்பணி கட்டிடம் சரிந்து விபத்து-ஒருவர் பலி

தேனி : தேனியில் உள்ள மேகமலை வனஉயிரின கோட்ட அலுவலகத்தில் கட்டப்பட்டு வரும் விரிவாக்க கட்டுமானப் பணியின்போது, கட்டிடம் சரிந்ததில் கட்டுமானத் தொழிலாளிகள் இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.தேனியில் கே.ஆர்.ஆர் நகரில் மேகமலை திருவில்லிப்புத்தூர் வனஉயிரின காப்பக உதவி இயக்குநர் அலுவலகம் உள்ளது. இவ்வலுகத்திற்கான விரிவாக்க கட்டிடம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இக்கட்டுமானத்தின் முகப்பு பகுதில் போர்டிகோ பகுதியில் உள்ள பால்கனிக்கு கீழ் சாரம் கட்டி கட்டுமானத் தொழிலாளர்கள் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மதியம் திடீரென போர்டிகோவிற்கான பால்கனி கட்டிடம் திடீரென சரிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் சாரத்தில் நின்றபடி பணி செய்து கொண்டிருந்த பெரியகுளம் பட்டாளம்மன்கோயில் தெருவை சேர்ந்த அசோக்(27), பெரியகுளம் அருகே பங்களாபட்டியை சேர்ந்த மாரிமுத்து(27) இருவரும் சரிந்து விழுந்த கட்டிடத்திற்குள் சிக்கி உயிருக்கு போராடினர்.

இதனையறிந்து தீயணைப்பு படையினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். அப்போது பொக்லைன் இயந்திரம் மூலம் கட்டுமான இடிபாடுகளில் சிக்கியிருந்த இரு கட்டுமானத் தொழிலாளர்களையும் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு, தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் பெரியகுளம் அருகே பங்களாபட்டியை சேர்ந்த மாரிமுத்து(27) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் ஒரு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மேகமலை திருவில்லிப்புத்தூர் வனஉயிரின காப்பக உதவி இயக்குநர் ஆனந்த் கூறியதாவது அலுவலக விரிவாக்க கட்டுமானப்பணி ஒப்பந்ததாரர் மூலம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது கட்டடம் சரிந்தது எதனால் என்பது குறித்து விசாரணை செய்யப்பட உள்ளது. கட்டடம் தரமற்றதாக இருந்ததா, கலவைசரியில்லாமல் இருந்ததா என விசாரணை செய்யப்படும்.

இது குறித்து போலீசிற்குத் தகவல் தரப்பட்டுள்ளது என்றார். மேகமலை வனஉயிரின காப்பக அலுவலகத்தில் கட்டப்பட்டு வந்த கட்டுமான இடிந்த விழுந்த பகுதியான பால்கனியானது கட்டிட பில்லர்களுடன் கூடிய ஹேண்ட்லீவர் பீமால் இணைக்கப்படாமல் சாதாரணமாக கான்கிரீட் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.

பில்லருடன் கூடிய பீமால் இணைத்து பால்கனி கட்டப்பட்டிருந்தால் பால்கனி சரிந்திருக்காது. கட்டுமானச் செலவை குறைக்கும் எண்ணத்தில் ஒப்பந்ததாரர் செய்த இச்செயலானது இவ்விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கட்டுமான நோக்கர்கள் கருதுகின்றனர். இச்சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: