×

நீலகிரியில் காற்றுடன் தொடர் மழை; ஊட்டி – கோத்தகிரி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு: யானைகள் காப்பகம் 22ம் தேதி வரை மூடல்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் பெய்யும் மழையால் தொட்டபெட்டா சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை காரணமாக முதுமலை யானைகள் காப்பகம் 22ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெரும்பாலான பகுதிகளில் சூறாவளி காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. ஊட்டி, மஞ்சூர், கூடலூர் மற்றும் பந்தலூர் போன்ற பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. சூறாவளியால் நேற்று மாலை ஊட்டி – கோத்திரி சாலையில் தொட்டபெட்டா அருகே சாலையோரத்தில் இருந்த மரம் விழுந்தது.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் ஊட்டியில் இருந்து பிங்கர் போஸ்ட் செல்லும் தமிழகம் சாலையில் மரம் விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் மரங்களை வெட்டி அகற்றியதை தொடர்ந்து வாகனங்கள் சென்றன. காற்றுடன் மழை பெய்து வருவதால், ஒரு சில இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

ஊட்டியில் கடும் குளிர் நிலவுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நான்காவது நாளாக இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தற்போது ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. இதற்கிடையே கடந்த 5 நாளில் அவலாஞ்சியில் 142 செமீ மழை கொட்டி தீர்த்துள்ளது.

நீலகிரியில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில்: ஊட்டி 7, நடுவட்டம் 60, கிளன்மார்க்கன் 38, குந்தா 45, எமரால்டு 40, அவலாஞ்சி 104, அப்பர் பவானி 77, பந்தலூர் 38, கூடலூர் 57, தேவாலா 47 மி.மீட்டர் பதிவாகியுள்ளது. யானைகள் காப்பகம் மூடல்: கூடலூரில் கன மழையால் மின் கம்பங்களின் மீது மரங்கள் முறிந்து விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. இதில் கூடலூர் சிங்காரா மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நேற்று மதியத்திற்கு மேல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு வினியோகம் பாதித்துள்ளது.

இதனால் கூடலூர், பந்தலூர் பகுதி நேற்று இரவு முழுவதும் இருளில் மூழ்கியது. மின் இணைப்பு சீரமைப்பு பணிகள் இன்றும் நடந்து வருகிறது. இதேபோல் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பகாட்டில் கனமழையால் மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கபட்டுள்ளது. இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சூழல் சுற்றுலா மையம் மற்றும் யானைகள் காப்பகம் இன்று 20ம் தேதி முதல் வரும் 22ம் தேதி வரை மூடப்படுகிறது என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

The post நீலகிரியில் காற்றுடன் தொடர் மழை; ஊட்டி – கோத்தகிரி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு: யானைகள் காப்பகம் 22ம் தேதி வரை மூடல் appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Ooty-Kothagiri ,Elephant ,Ooty ,Thottapeta road ,Nilgiris district ,Mudumalai Elephant Sanctuary ,Elephant sanctuary ,Dinakaran ,
× RELATED பொதுமக்களின் பயன்பாட்டிற்காக...