×

மீண்டும் பூக்கள் வரத்து, வியாபாரிகள் வருகை அதிகரிப்பு: கொடைரோடு ரோஜா பூ மார்க்கெட்டை புதுப்பிக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 3வது மார்க்கெட்டான கொடைரோடு ரோஜா பூ மார்க்கெட்டிற்கு மீண்டும் பூக்கள் வரத்து, வியாபாரிகள் வருகை அதிகரித்துள்ளது. எனவே இம்மார்க்கெட்டை நவீன வசதிகளுடன் புதுப்பித்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நிலக்கோட்டையை அடுத்த அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ரோஜா பூ மார்க்கெட். கொடைரோடு பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள இந்த மார்க்கெட் உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் எளிதில் வந்து செல்ல ஏதுவாக உள்ளது. இம்மார்க்கெட் பகுதி நேரமாக சுமார் 25 கடைகளுடன் பரபரப்பாக இயங்கி வந்தது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட வறட்சி மற்றும் கொரோனா தடை காலம் காரணமாக படிப்படியாக முடக்கப்பட்ட இம்மார்க்கெட் தற்போது கைவிடப்படும் நிலையில் உள்ளது. எனவே இந்த ரோஜா மார்க்கெட்டை புதுப்பித்து செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த ரோஜா பூ விவசாயி ஆறுமுகம் கூறுகையில், ‘திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், நிலக்கோட்டை ஆகிய பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட்டுகளுக்கு அடுத்தபடியாக கொடைரோடு ரோஜா பூ மார்க்கெட் உள்ளது. இங்கு சிறுமலை அடிவார பகுதிகளான பள்ளப்பட்டி, காமலாபுரம், மெட்டூர், ராமராஜபுரம், சடையாண்டிபுரம், ராஜதானிக்கோட்டை, ெகாழிஞ்சிபட்டி, நாகையகவுண்டன்பட்டி, அம்மையநாயக்கனூர், பொட்டிகுளம், சிலுக்குவார்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் உற்பத்தி செய்யப்படும் ரோஜா பூக்களை விவசாயிகளே நேரடியாக விற்பனைக்கு கொண்டு வருவர். கொடைரோடு பஸ் நிலையம் அருகில் உள்ளதால் உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் எளிதில் வந்து இங்கு ரோஜா பூக்களை வாங்கி செல்வர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் நிலவி வந்த கடும் வறட்சி காரணமாக நீர்நிலைகள் வற்றி நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றது. இதனால் இப்பகுதியில் ரோஜா பூ சாகுபடி பரப்பும் வெகுவாக குறைந்தது. தொடர்ந்து கொரோனா ஊரடங்கு உள்பட பல்வேறு தடைகளால் இம்மார்க்கெட்டில் வியாபாரிகள் வருகை குறைந்தது. இதனால் விவசாயிகள் நேரடியாக திண்டுக்கல், நிலக்கோட்டை, மதுரை மார்க்கெட்டுகளுக்கு சென்று பூக்களை விற்பனை செய்ய துவங்கினர். இதன் காரணமாக தற்போது இம்மார்க்கெட்டிற்கு வியாபாரிகள் வருகை முற்றிலும் குறைந்து விட்டது. இதனால் போதிய வருவாயின்றி பேரூராட்சி நிர்வாகத்தினரும் இம்மார்க்கெட்டை புனரமைப்பு செய்யாமல் அப்படியே விட்டு விட்டனர்.

இதற்கிடையே கடந்த ஆண்டு முதல் இப்பகுதியில் வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்தது. இதன் காரணமாக இப்பகுதி விவசாயிகள் மீண்டும் அதிகளவில் ரோஜா பூ சாகுபடி செய்துள்ளனர். இதனால் கடந்த சில மாதங்களாக இம்மார்க்கெட்டிற்கு ரோஜா பூக்களின் வரத்து அதிகரித்து வருவதால் உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வர துவங்கியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொடைரோடு ரோஜா பூ மார்க்கெட்டை குடிநீர், கழிப்பறை, பார்க்கிங் என நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்து புதுப்பிக்க நடவடிக்கை எடுத்து இப்பகுதி விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். இவ்வாறு கூறினார்.

Tags : Kodairod ,Rose Flower Market , Flowers arrive, increase in the number of traders, Kodairod Rose Flower Market,
× RELATED மாவட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு: தடுப்பு நடவடிக்கை தேவை