×

சென்னை ரவுடிக்கு நெருக்கமான வக்கீல் சரமாரியாக வெட்டிக்கொலை: தொழில் போட்டி குறித்தும் போலீசார் தீவிர விசாரணை

சென்னை: வீட்டு வாசலில் நின்று சக நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, வழக்கறிஞர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.  இக்கொலை தொழில் போட்டி காரணமாக நடந்ததா என்பது குறித்து, துரைப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை பெருங்குடி, ராஜ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (33), சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞர். நேற்று முன்தினம் மாலை சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் விளையாட்டுப் போட்டி நடந்துள்ளது. இதில், ஜெய்கணேஷ் கிரிக்கெட் விளையாடியுள்ளார். அப்போது சக வழக்கறிஞர் ஒருவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

அங்கிருந்து வீட்டிற்கு வந்த ஜெய்கணேஷ், நண்பர்களுடன் வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். அங்கு திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், ஜெய்கணேஷை பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவரவே, மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து, துரைப்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமிஷனர் ஜீவானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜெய்கணேஷை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜெய்கணேஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் அதை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பிரபல ரவுடி ஒருவரின் நெருங்கிய நண்பரான ஜெய்கணேஷ், அவருடைய வழக்கறிஞராகவும் இருந்துள்ளார். ரவுடிக்கு வழக்கு தொடர்பாக விசுவாசம் காட்டுவதில் ஜெய்கணேசுடன் மற்றொரு வழக்கறிஞருக்கும் தொழில்போட்டி இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, துரைப்பாக்கம் போலீசார், 2 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் ஜெய்கணேஷை கொலை செய்தவர்கள் யார், எதற்காக கொலை செய்தனர் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக ரவுடியிடமும் விசாரணை நடக்கிறது.

கொலை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே, ஜெய்கணேஷை கொலை செய்த உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி நேற்று முன்தினம் இரவு ராயப்பேட்டை அரசு மருத்துவமனை முன்பு வழக்கறிஞர்கள் மற்றும் ஜெய்கணேஷ் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை தொடர்ந்து, அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். வழக்கறிஞர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chennai , A lawyer close to the Chennai raider was hacked to death: Police are also investigating the business competition
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...