ஆந்திர மாநிலம் மூனேறு ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஜீப்புடன் வெள்ளத்தில் சிக்கிய வாலிபர்கள்

*பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்

திருமலை : ஆந்திர மாநிலம் என்.டி.ஆர்.மாவட்டம் நந்திகாமவில் மூனேறு ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் பெருமழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இந்த ஆற்றில் தற்போது வெள்ளம் குறைந்து குறைந்தளவு தண்ணீர் செல்கிறது. ஆற்றின் பல இடங்களில் மணல் திட்டுக்கள் அதிகம் காணப்படுகிறது. இந்த மணல் திட்டுக்களில் அவ்வப்போது அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் சென்று விளையாடி பொழுது போக்குவது வழக்கம்.

அதன்படி நேற்றுமுன்தினம் மாலை ஒரு ஜீப்பில் சில வாலிபர்கள் மூனேறு ஆற்றுக்கு வந்தனர். அங்கு தண்ணீர் இல்லாத மணல் திட்டில் ஜீப்பை நிறுத்திவிட்டு உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பெய்த மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர்கள், ஜீப்பை எடுக்க முயன்றனர்.

ஆனால் ஜீப் வெள்ளத்தில் சிக்கியதால் வெளியேற முடியவில்லை. இதையடுத்து அவர்கள், தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். தகவலறிந்த அப்பகுதி மக்கள், பெரிய டிராக்டரை கொண்டு வந்து தண்ணீரில் இறக்கி கயிற்றால் வாகனத்தையும், அதில் இருந்த வாலிபர்களையும் நீண்ட நேரம் போராடி பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: