×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் தொழிலாளி ஜெகன் கொலை வழக்கில் அதிமுகவை சேர்ந்த பெண்ணின் தந்தை கைது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டதால், டைல்ஸ்  பதிக்கும் தொழிலாளி ஜெகன் கொலை வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த பெண்ணின் தந்தை சங்கர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சட்டப்பேரவையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘கிருஷ்ணகிரி மாவட்டம், கிட்டாம்பட்டியைச் சேர்ந்த ஜெகன், முழுக்கான்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சரண்யா ஆகியோர் 3 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இரு நாட்களுக்கு முன்பு ஜெகன் டைல்ஸ் வேலைக்கு செல்லும்போது, பெண்ணின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், பட்டப்பகலில் பொதுமக்கள் பலர் முன்னிலையில் ஜெகனை சராமாரியாக வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இதை அந்த வழியாகச் சென்ற பலபேர் செல்போனில் பதிவுசெய்து, சமூக  வலைதளங்களில் பகிர்ந்தனர். இது நாடெங்கும் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் எற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற தகவலை அவைக்கு தெரிவிக்க வேண்டும்’ என்றார்.  இதற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் காவல்நிலைய சரகம், கிட்டம்பட்டியைச் சேர்ந்த ஜெகன் (வயது 28), மார்ச் 21ம் தேதி அன்று சுமார் 1.30 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் கே.ஆர்.பி. அணை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, முழுக்கான்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (அதிமுக பிரமுகர்) உள்ளிட்ட மூவர், ஜெகனை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கியதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்த விசாரணையில், கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு பயிலும் மாணவியான சங்கரின் மகள் சரண்யாவை, டைல்ஸ் பதிக்கும் தொழிலாளியான ஜெகன் காதலித்து, பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி வீட்டைவிட்டு அழைத்துச் சென்று, 26-1-2023 அன்று கோயிலில் வைத்துத் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமுற்ற சங்கர் உள்ளிட்டோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். சங்கர் காவல் துறையினரால் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொலையில் சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர், அவதானப்பட்டி அதிமுக செயலாளர் என்பது காவல் துறையினரால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கைகளும், விழிப்புணர்வு பணிகளும் காவல் துறை சார்பில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமூக நீதி காக்கும் மண்ணாக விளங்குகின்ற தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாதவண்ணம் அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து மனிதநேய அடிப்படையில், சமூக நல்லிணக்கத்தை பேணிக் காத்திட வேண்டுமென இந்த மாமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். சமூக நீதி காக்கும் மண்ணான தமிழ்நாட்டில் இந்த நிகழ்வுகள் நடைபெறாதவண்ணம் அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து மனிதநேயத்தின் கீழ், சமூக நல்லிணக்கத்தை பேணி காக்க வேண்டும்.

Tags : AIADMK ,Jagan ,Krishnagiri district ,Chief Minister ,M.K.Stal , AIADMK woman's father arrested in case of murder of laborer Jagan because he fell in love with his daughter and married her in Krishnagiri district: Chief Minister M.K.Stal's information
× RELATED ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி,...