×
Saravana Stores

அன்பு இல்ல ஆசிரம நிர்வாகிகள் ஜாமீன் மனு கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: விழுப்புரம் அன்பு இல்லம் ஆசிரம நிர்வாகிகள் ஏழு பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம்  மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த ஆதரவற்றோர் காணாமல் போனது தொடர்பாகவும், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தொடர்பாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு  தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆசிரம நிர்வாகிகள் ஜுபின் பேபி, அவரது மனைவி மரியா உள்பட 7 பேர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனு நேற்று நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு  விசாரணைக்கு வந்தபோது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், 18 ஆண்டுகளாக ஆசிரமம் நடத்தி வரும் தங்கள் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. தற்போது காவல்துறையினர் வேண்டும் என்றே தவறாக வழக்கு பதிவு செய்துள்ளனர். எங்கள் மீது புகாரே அளிக்கப்படாத நிலையில், போலிசாரே தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறினர்.

இதற்கு பதிலளித்த காவல்துறை  தரப்பு வழக்கறிஞர், ஆசிரமத்தில் இருந்த ஒருவர் காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்த பின்னரே வழக்குப்பதிவு செயப்பட்டது. பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டும் கூறியுள்ளார். அது தொடர்பான மருத்துவ அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்று வாதிட்டார். இதையடுத்து  நீதிபதி, ஆசிரமம் தொடர்பான நிகழ்ச்சிகள், மருத்துவ அறிக்கை உள்ளிட்டவற்றை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 29ம் தேதிக்கு  தள்ளிவைத்தார்.

Tags : Anbu Illa Ashram , Anbu Illa Ashram administrators to file additional documents in bail plea: Court orders police
× RELATED விண்வெளி சார்ந்த தொழில்நுட்பங்களுடன்...