×

பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் விளக்கம்

சென்னை: பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தது குறித்து சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தில் பட்டாசு ஆலையில் 9 பேர் உயிரிழந்ததை குறிப்பிட்டு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் நிவாரணம் வழங்கிய முதலமைச்சர் மற்றும் பிரதமர் இருவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்த விபத்துகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தலையும் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை முன்வைத்திருந்தார். இதனை தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தார். பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து தொடருவதை தடுக்க வேண்டும் என பேரவையில் பாமக வலியுறுத்தியுள்ளது. உரிய பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்காத பட்டாசு ஆலைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் விளக்கமளித்துள்ளார். அப்போது பேசிய அவர்; பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பட்டாசு ஆலை உரிமையாளர்களிடம் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. சிறிய பட்டாசு ஆலைகள் லாப நோக்கத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவதால்தான் விபத்து ஏற்படுகிறது. திருவிழாவுக்கு அதிகளவு ஆட்களைக் கொண்டு பட்டாசு தயாரித்ததால்தான் விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.


Tags : Minister ,KKSSR ,Ramachandran , Fireworks Factory, Explosion Accident, Injured, Proper Treatment, Minister KKSSR Ramachandran, Explanation
× RELATED விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளரை...