×

காஞ்சிபுரம் குருவிமலை பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து 10 தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாப சாவு: 17 பேர் உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் உயிருக்கு போராட்டம்; ஆலை உரிமையாளரான அதிமுக பிரமுகர் கைது

சென்னை: காஞ்சிபுரம் அடுத்த குருவிமலையில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 10 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 17 பேர் கை, கால்கள் இழந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் உயிருக்கு போராடி வருகின்றனர். இது தொடர்பாக, பட்டாசு ஆலையின் உரிமையாளரான அதிமுக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரத்தை அடுத்த குருவிமலை வசந்தம் நகர் பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ‘நரேன் பயர் ஒர்க்ஸ்’ தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் நரேன்(எ) நரேந்திரன், அதிமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். மேலும், நரேன் பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு சங்க இயக்குநராகவும் உள்ளார்.

விபத்து நடந்த பட்டாசு ஆலையில் காஞ்சிபுரம் மற்றும் குருவிமலை சுற்றியுள்ள வளத்தோட்டம் கிராமங்களை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த பட்டாசு தொழிற்சாலையில் கோயில் திருவிழா மற்றும் திருமணங்கள் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளுக்கு வாண வேடிக்கை, வெடிகள் மற்றும் சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில், வழக்கம்போல் பட்டாசு ஆலைக்கு காலை 9 மணிக்கு 27 தொழிலாளர்கள் பணிக்கு வந்துள்ளனர். வழக்கமாக பட்டாசுகள் தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் குடோன் முன்பு வெயிலில் காயவைப்பது வழக்கம். அதன்படி, மூலப்பொருட்களை ஊழியர்கள் வெளியில் காயவைக்கும் போது, மூலப்பொருட்கள் ஒன்றுடன் ஒன்று உராய்வு ஏற்பட்டு பகல் 12 மணியளவில் மளமளவென தீ பிடித்தது.

மேலும், பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் தயாரித்து கொண்டு இருந்த மற்ற குடோனுக்கும் பரவியது. அப்போது ,பெண்கள் உட்பட 27 தொழிலாளர்கள் பட்டாசுகள் தயாரிக்க மூலப்பொருட்கள் கலந்து கொண்டிருந்தனர். திடீரென பரவிய தீ மற்றும் பட்டாசுகள் வெடித்தை பார்த்து அவர்கள் தப்ப முயன்றனர். ஆனால் வெடிகள் வெடித்து தப்பியோட முயன்றவர்கள் மீது வெடித்தது. மேலும் பலர் புகை மூட்டத்தில் சிக்கி வெளியில் வர முடியாமல் மூச்சு திணறி மயங்கி விழுந்தனர்.
வெடிகள் சில வினாடிகளில் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் குடோன் இடிந்து தரை மட்டமானது. அப்பகுதியில் பூகம்பம் ஏற்பட்டது போன்று காணப்பட்டது.

இதில் குடோனில் பணியில் இருந்த 10 பேர் உடல் பல பாகங்களாக சிதறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும், 18 பேர் கை, கால்கள், உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். பட்டாசு ஆலையில் வெடி விபத்து சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து பார்த்து அதிர்ந்தனர்.  மேலும், பலர் உயிர் தப்ப அங்கும் இங்கும் ஓடினர். உயிருக்கு போராடியவர்கள் மீதுள்ள தீயை அணைத்தனர். உடனே காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது வெடி விபத்தால் உயிருக்கு போராடி கொண்டிருந்த தொழிலாளர்களை தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர்.

மேலும், தீ பிடித்து எரிந்த பகுதியில் உள்ள தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர். பின்னர் இடிபாடுகளில் சிக்கியவர்களை தீயணைப்பு வீரர்கள் பொக்லைன் இயந்திர உதவியுடன் மீட்டனர். வெடி விபத்தில் உடல் பாகங்கள் இழந்து உயிருக்கு போராடிய பெண்கள் உட்பட 18 தொழிலாளர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். வெடி விபத்தில் சம்பவ இடத்தில் 10 பேர் உடல் கருகியும், உடல்கள் சிதறியும் உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் விபத்து நடந்த பகுதிக்கு வந்து உயிரிழந்த தொழிலாளர்களை பார்த்து கதறி அழுதனர். வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி, காவல்துறை டிஐஜி பகலவன், எஸ்பி டாக்டர் சுதாகர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். இந்த சம்பவத்தால் குருவிமலை பகுதியில் நேற்று முழுவதும் பரபரப்பு நிலவியது.

இந்த விபத்து குறித்து காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையம் போலீசார் ‘நரேன் பயர் ஒர்க்ஸ்’ உரிமையாளர் நரேன் உள்ளிட்டோர் மீது ஐபிசி 286, 304(2), 338 மற்றும் வெடிபொருட்கள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பட்டாசு ஆலை உரிமையாளர் நரேந்திரன் என்பவரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் விபத்து குறித்து நடத்திய விசாரணையில், பட்டாசு தயாரிக்கும் குடோனில் 10 பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 27 பேர் பணியாற்றி வந்த தெரியவந்தது. பட்டாசு ஆலைக்கான தீயணைப்பு விதித்துள்ள கட்டுப்பாடுகள் எதுவும், இந்த பட்டாசு ஆலையில் முறையாக கடைபிடிக்கவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 18 தொழிலாளர்களில் சசிகலா என்ற பெண் தொழிலாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அமைச்சர் ஆறுதல்: பட்டாசு விபத்து நடந்த இடத்திற்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சென்று, விபத்தில் இறந்த உறவினர்கள் மற்றும் பலத்த காயமடைந்த உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்தும் டாக்டர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார். தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்க அவர் டாக்டர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கூறுகையில், ‘ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 10 பேர் மட்டுமே பணி செய்யக்கூடிய இடத்தில், 27 பேர் வரை பணியாற்றி உள்ளனர். இது தவறு இனி இதுபோன்ற தவறுகள் மாவட்டத்தில் ஏற்படாத வண்ணம் கலெக்டர் மற்றும் காவல்துறையினர் கண்காணித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தல் கொடுத்துள்ளோம். மேலும், பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் விதிமீறி செயல்படுமாயின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

* உரிய விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு
வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலையை நேரில் பார்வையிட்ட காஞ்சிபுரம் கலெக்டர் கூறுகையில், ‘ பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவம் குறித்து காவல்துறை மூலம் உரிய விசாரணை நடத்தப்படும். இந்த பட்டாசு ஆலைக்கான ‘லைசென்ஸ்’ 2024ம் ஆண்டுவரை உரிமையாளர் பெற்றுள்ளார். எனவே முழுமையான விசாரணைக்கு பிறகே விபத்துக்கான காரணம் தெரியவரும்.

* சிதறி கிடந்த உடல் பாகங்கள்
பட்டாசு ஆலையில் கடந்த 1 வருடத்திற்கு முன்பு தான், வெடி பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் பாதுகாப்பாக வைக்க புதிதாக குடோன் கட்டப்பட்டது. இந்த வெடி விபத்தில் குடோன் இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமாகி உள்ளது.  கட்டிடத்தின் இடிபாடுகள் மற்றும் மேற்கூரைகள் மற்றும் தொழிலாளர்களின் கை, கால்கள் என உடல் பாகங்களும் தனித்தனியாக அரை கிலோ மீட்டர் தொலைவில் சிதறி கிடந்தது. சுற்றியுள்ள மரங்களில் தொழிலாளர்களின் துணிகள் பாகங்கள் தொங்கி கிடந்ததை நேரில் காண முடிந்தது.

* உயிரிழந்தவர்கள் பட்டியல்
காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த பூபதி(57), சுதர்சன்(31), வளத்தோட்டம் பகுதியை சேர்ந்த வித்யா(30), பள்ளூர் பகுதியை சேர்ந்த முருகன்(40), குருவிமலை பகுதியை சேர்ந்த தேவி(32), சசிகலா(38), கங்காதரன்(35) 2 தொழிலளர்கள் உடல் முழுவதும் சிதைந்துள்ளதால் அடையானம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

* 3 கி.மீ. தூரத்துக்கு கேட்ட வெடிசத்தம்
குருவிமலை பட்டாசு ஆலை விபத்தின் ஏற்பட்ட வெடி சத்தம் 3 கி.மீ தொலைவில் உள்ள ஓரிக்கை மிலிட்டரி ரோடு பகுதி வரை கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

* எல்லாம் நிமிடத்தில் முடிந்து விட்டது
பட்டாசு ஆலையில் நேற்று பணியில் இருந்து விபத்தில் காயமடைந்த குருவிமலை பகுதியை தொழிலாளர்கள் உமா, சரிதா, சாரதா ஆகியோர் கூறுகையில், நாங்கள் வழக்கம் போல் வேலைக்கு சென்றோம். நாங்கள் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கும் போது, திடீரென பயங்கர சத்தம் கேட்டது. அது என்ன என்று சுதாரித்து பார்ப்பதற்குள் எங்கள் மீது பட்டாசுகள் வெடித்தப்படி பறந்து எங்கள் மீது விழுந்தது. கரும் புகை மற்றும் வெடி விபத்தால் எங்களால் அங்கிருந்து தப்பி ஓட முடியாமல் சிக்கி கொண்டோம். எங்கள் அழு குரலை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து எங்களை மீட்டனர். ‘எல்லாம் ஒரு நிமிடத்தில் முடிந்துவிட்டது’. எங்களுக்கு கை, கால் அடிப்பட்டு விட்டால் எங்களின் பிள்ளைகளை யார் கவனிப்பார்கள் என்று மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்துகள் விபரம்:
* 2006ம் ஆண்டு வையாவூரில் நடந்த வெடி விபத்தில் 3 பேர் பலி.
* 2014 ல் வையாவூரில் நடந்த வெடி விபத்தில் 6 பேர் பலி.
* 2017 ல் கலெக்டர் அலுவலகம் அருகே பள்ளத்தெருவில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்து இருவர் படுகாயம்.
* 2018 ல் காஞ்சிபுரம் நாகலுத்து தெருவில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலி.
* 2023 ல் தற்போது குருவிமலை பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பலி.

* கமல் டிவிட்
காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

* ரசாயன உராய்வால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம்
பட்டாசு ஆலை விபத்து குறித்து வேலூர் மண்டல தீயணைப்புத்துறை இணை இயக்குனர் சரவணகுமார் கூறுகையில்,‘ இந்த பட்டாசு ஆலையில் ஏராளமானோர் வேலை செய்து கொண்டிருந்த நிலையில், நேற்று பகல் 12.3 பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்தது. அதன்பேரில், உடனடியாக காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து, தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றோம்.

அப்போது, பெரிய அளவில் விபத்து ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து, இந்த தீவிபத்தில் சிக்கிய 3 பேர் சடலமாகவும், 15க்கும் மேற்பட்டோரை பலத்த காயத்துடன் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். ஆலைக்கு உரிமம் இருக்கிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்படும். அதிக வெப்பநிலை, ரசாயன மாற்றம் மற்றும் மூலப் பொருள்கள் உராய்வு, கையாளுதலில் தவறு போன்ற காரணங்களால் விபத்து ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, இதுகுறித்து ஆய்விற்கு பிறகே விபத்திற்கான காரணம் தெரியவரும்’ என்றார்.

* காயமடைந்தோரை மீட்க உதவிய திருநங்கைகள்
காஞ்சிபுரம் அருகே குருவிமலை பகுதியில் நடைபெற்ற தீ விபத்து பயங்கர சத்தத்துடன் வெடித்ததால், அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் அருகில் குடியிருக்கும் திருநங்கைகள் என அனைத்து தரப்பு மக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயம் அடைந்தவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, திருநங்கைகள் மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள், போலீசார்கள், அரசு ஊழியர்களுக்கும் தண்ணீர் பாட்டில் மற்றும் பிஸ்கட்களை கொடுத்து உதவியது அனைவரையும் நேகிழ வைத்தது. காஞ்சிபுரம் குருவிமலை அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து நடந்த இடத்திற்கு அருகே வசிக்கும் திருநங்கை நகர் பகுதியில் இந்த வெடி விபத்தால் வீடுகள் முழுமையாக விரிசல் ஏற்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கு என அரசு கொடுத்த இடத்தில் வீடுகட்டி வசித்து வருகின்றனர். இதில், 4 வீடுகள் முழுமையாக விரிசல் ஏற்பட்டுள்ளது.

Tags : Kancheepuram ,Kuruvimalai Fireworks Factory ,AIADMK , Kancheepuram Kuruvimalai Fireworks Factory Explosion: 10 workers die tragically: 17 people struggle for life with mutilated body parts; Plant owner AIADMK leader arrested
× RELATED உலகத்திலேயே அண்ணாமலை தான் மிகப்பெரிய...