×

ஐஐடி உள்ளிட்ட ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டில் 61 பேர் தற்கொலை: மதுரை எம்பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் அதிர்ச்சி பதில்

மதுரை: ஐஐடி உள்ளிட்ட ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டில்  61 பேர் தற்கொலை செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் பதில் அளித்து உள்ளார். மும்பை ஐ.ஐ.டி உள்ளிட்ட ஒன்றிய கல்வி நிறுவனங்களில் நிகழும் தற்கொலைகளை தடுக்க என்ன நடவடிக்கைகள், ஒன்றிய  கல்வி நிறுவன வாரியாக எஸ்.சி, எஸ்.டி செல்கள் அமைக்கப்பட்ட விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை மதுரை எம்பி சு.வெங்கடேசன் கேட்டிருந்தார்.

அதற்கு கல்வித்துறை இணை அமைச்சர் சர்க்கார் அளித்துள்ள பதிலில், கடந்த ஐந்தாண்டுகளில் ஐ.ஐ.டி 33, என்.ஐ.டி 24, ஐ.ஐ.எம் 4 என மொத்தம் 61 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து மதுரை எம்பி சு. வெங்கடேசன் கூறுகையில், ‘அமைச்சரின் பதில் அதிர்ச்சியை தருகிறது. 61 தற்கொலைகள் என்பது மன அழுத்த சூழல் ஒன்றிய  கல்வி நிறுவனங்களில் தொடர்வதையே காண்பிக்கிறது. இன்னும் 21 நிறுவனங்களில் எஸ்.சி, எஸ்.டி செல்கள் இல்லை என்றும் அவரது விரிவான பதிலில் தெரிகிறது. இவ்வளவு தற்கொலைகளில் இருந்து இந்த உயர் கல்வி நிறுவனங்கள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதும், அரசு தரப்பில் இருந்தும் கண்காணித்து உறுதி செய்யவில்லை என்பதும் தெளிவாகிறது. தற்கொலைகள் நிகழ்வதற்காக காத்திருப்பது போன்று அந்த நிறுவனங்களும் அரசும் இருப்பது கண்டிக்கத்தக்கது.   

இதையெல்லாம் 9 ஆண்டுகளில் கண்காணிக்கவும், உறுதி செய்யவும் தவறியுள்ள ஒன்றிய கல்வி அமைச்சகம் ‘புதிய கல்விக் கொள்கை 2020’ தற்கொலைகளை தடுத்து விடும் என்று பதிலில் நீட்டி முழக்கி வகுப்பு எடுக்கப்பட்டிருக்கிறது. இது ரசிக்க இயலாத நகைச்சுவையாகும்’ என்றார்.



Tags : Union Higher Education Institutions ,Union Minister ,Madurai , 61 suicides in Union Higher Education Institutions including IITs in 5 years: Union Minister's shocking response to Madurai MP's question
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...