×

கோயில்கள் பற்றிய வழக்கு தொடர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் நேர்மையை நிரூபித்தால் மட்டுமே டெபாசிட் செய்த பணம் திருப்பி தர முடியும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோயில்கள் தொடர்பான பொதுநல வழக்கு தொடர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் நேர்மைத்தன்மையை நிரூபிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேர்மைத்தன்மையை நிரூபித்தால் மட்டுமே டெபாசிட் செய்த ரூ.3.50 லட்சத்தை திருப்பி அளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக கோயில்கள் தொடர்பாக பல்வேறு வழக்குகளை தொடர்ந்து வருகிறார். சமீபத்தில் ரங்கராஜன் நரசிம்மன் 7 பொதுநல வழக்குகள் தாக்கல் செய்தார். குறிப்பாக இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தக்கார்களின் நியமனம் தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஏற்கனவே இந்த வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இதுபோன்று தொடர்ச்சியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வரும் ரங்கராஜன் நரசிம்மன், தன்னுடைய நேர்மையை நிரூபிக்கும் வகையில், ஒவ்வொரு மனுக்களும் தலா 50 ரூபாய் வீதம், 7 மனுக்களுக்கும் சேர்த்து 3.50 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அவ்வாறு டெபாசிட் செய்யும் பட்சத்தில், அந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு ரங்கராஜன் நரசிம்மன் நீதிமன்றத்தில் 3.50 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தற்போது, தன்னுடைய 7 வழக்குகளையும் உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதால் தான் டெபாசிட் செய்த ரூ.3.50 லட்சம் பணத்தை திருப்பி வழங்க வேண்டும் என்று ரங்கராஜன் நரசிம்மன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், தற்போதைய நிலையில், வழக்கை விசாரணைக்கு இன்னும் அனுமதிக்கவில்லை, அரசு தரப்பில் பதில் அளிக்க மட்டுமே உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே டெபாசிட் தொகையை வழங்க முடியாது என்று தெரிவித்து இது தொடர்பாக இறுதி உத்தரவு பிறப்பிக்கும் போது தான் உறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும், முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

The post கோயில்கள் பற்றிய வழக்கு தொடர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் நேர்மையை நிரூபித்தால் மட்டுமே டெபாசிட் செய்த பணம் திருப்பி தர முடியும்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Rangarajan Narasimman ,iCourt ,Chennai ,Chennai High Court ,Trichy ,Srirangath ,
× RELATED கோடைகாலத்தில் விலங்குகளுக்கு நீர்,...