ஆலந்தூர்: வாலாஜாபாத்தில் இருந்து சைதாபேட்டையை நோக்கி நேற்று ஜல்லி கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரி கிண்டி மேம்பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து மேம்பால நடைபாதையின் தடுப்புச் சுவர் மீது மோதி நின்றது. இதில் தடுப்புச் சுவர் பெயர்ந்து, டிப்பர் லாரியின் டீசல் டேங்க் உடைந்தது. இதனால் சாலை முழுவதும் டீசல் மற்றும் இன்ஜின் ஆயில் கொட்டி ஆறுபோல் ஓடியது. இதுகுறித்த தகவல் அறிந்ததும், கிண்டி போலீசார் விரைந்து சென்று டிப்பர் லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் மாநகராட்சி ஊழியர்களை வரவழைத்து சாலையில் மணலைக் கொட்டி சீர் செய்தனர். இதனால் இப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.