×

இணையதள முறைகேடு வழக்கில் கேரள இளைஞர்கள் சிக்கினர்

பல்லாவரம்: பல்லாவரத்தில் தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தின் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் கேரள இளைஞர்கள், 2 பேரை போலீசார் கைது செய்தனர். பல்லாவரம் பகுதிகளில் உள்ள பிரபல தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கியிருந்து சிலர், தங்களது இணையதள சேவையை சட்ட விரோதமாக பயன்படுத்தி வருவதாகவும், இதனால் தங்களது நிறுவனத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, பாரதி ஏர்டெல் நிறுவனம் சார்பில் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் கேரள மாநிலம், மலப்புரம் பகுதியை சேர்ந்த பாகத்முகமது (25), சாகல் (25) ஆகியோர் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் பல்லாவரம், ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள பிரபல சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் தங்களது அறையில் பதுங்கியிருந்த பாகத்முகமது, சாகல் ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்து நடத்திய விசாரணையில், சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை, பல ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து வாடகைக்கு எடுத்து, இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதும், இதுபோன்ற சொகுசு விடுதிகளில் தங்கியிருந்தால் போலீசார் உள்ளிட்ட யாருக்கும் தங்கள் மீது சந்தேகம் வராது என்பதால், தங்களது சட்டவிரோத செயல்களை எவ்வித தங்கு தடையுமின்றி தொடர்ந்து செய்து வருவதற்கு இது பெரிதும் வசதியாக இருந்ததாக தெரிவித்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து நெட் ஒர்க்கை சட்ட விரோதமாக உபயோகப்படுத்த பயன்படுத்தும் நவீன கருவிகள், லேப்டாப் மற்றும் செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.




Tags : Kerala , Kerala youth caught in internet abuse case
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...