படப்பை ஊராட்சியில் தெருக்களில் சுற்றித்திரியும் பன்றிகள்: நோய்கள் பரவும் என அச்சம்

ஸ்ரீபெரும்புதூர்: படப்பை ஊராட்சியில் தெருக்களில் சுற்றித்திரியும் பன்றிகளால் நோய்கள் பரவும் என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம், படப்பை ஊராட்சியில் படப்பை, கீழ் படப்பை, பெரியார் நகர், விஷ்ணு நகர், சண்முகா நகர், ஆத்தனஞ்சேரி, கே.கே.நகர், கலைஞர் நகர் உள்ளிட்ட நகர்கள் உள்ளன. இப்பகுதிகளில், 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, ஆரம்ப சுகாதார நிலையம், அரசினர் ஆண்கள், பெண்கள் மேல்நிலை பள்ளிகள் ஆகியவை இயங்கி வருகின்றன.

மேலும் வணிக வளாகங்கள், ஓட்டல், இறைச்சி கடை என 500க்கும் அதிகமான கடைகள் உள்ளன. இங்கு, துப்புரவு பணியாளர்களை கொண்டு சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகளை படப்பை ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் மணிமங்கலம் - புஷ்பகிரி சாலையையொட்டி, குப்பைகளை கொட்டி சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும், படப்பை ஊராட்சியில் கோழி, ஆடு, மாடு இறைச்சி கடைகளில் வீணாகும் இறைச்சி கழிவுகளை மேற்கண்ட குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர். இதனால் ஆங்காங்கே சாலை மற்றும் தெருக்களின் ஓரங்களில் குப்பை தேங்கி உள்ளதால், நாய்கள் மற்றும் பன்றிகள் இறைச்சி கழிவுகளை சாப்பிட ஊராட்சி முழுவதும் சுற்றி திரிகிறது.

இதனால், படப்பை ஊராட்சியில் நாளுக்கு நாள் பன்றிகளின் தொல்லை அதிகரித்து வருவதால், நோய் பரவும் அபாயம் நிலவி வருகிறது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘படப்பை ஊராட்சி அசுர வளர்ச்சி அடைந்து வருவதால், நாளுக்குநாள் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. ஆனால், படப்பை ஊராட்சியில் முறையாக துப்புரவு பணிகள் நடைபெறாமல் உள்ளதால், பெரும்பாலான தெருக்களில் குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு கிடக்கிறது.

மேலும், தெருக்களில் கழிவுநீர் தேங்கி உள்ளது.  சிதறி கிடக்கும் இறைச்சி மற்றும் குப்பையில் உள்ள இங்கு 500க்கும் அதிகமான பன்றிகள் சுற்றித் திரிகிறது. மேலும், குடியிருப்பு வீடுகளில் பன்றிகள் தஞ்சமடைகிறது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து, படப்பை ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தகவல் கொடுக்கபட்டுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றனர்.

Related Stories: