தமிழ்நாடு அரசு பட்ஜெட் 2023-24: இலங்கை தமிழர்களுக்கு 2ம் கட்டமாக 3,959 வீடு கட்டரூ.223 கோடி

இலங்கைத் தமிழர்களுக்கான பாதுகாப்பான, தரமான தங்குமிடங்களை வழங்கும் நோக்கத்துடன் மறுவாழ்வு முகாம்களில் 7,469 புதிய வீடுகள் கட்டப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதன் முதற்கட்டமாக, 3,510 வீடுகளுக்கான பணிகள் ரூ.176 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகின்றன. 2ம் கட்டமாக மீதமுள்ள 3,959 வீடுகள் கட்ட, வரும் நிதியாண்டில் ரூ.223 கோடியை அரசு வழங்கும்.

* பழனி, திருத்தணி, சமயபுரம் கோயில்களில் ரூ.485 கோடியில் பணிகள்

திமுக அரசு ஆட்சியில், 4,491 ஏக்கரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ரூ.4,236 கோடி மதிப்பு கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது. கோயில் நிலங்களின் புவிசார் ஒருங்கிணைப்புகளை பதிவு செய்யவும், நில வளங்கள் பற்றிய தரவுத்தளத்தை தயாரிப்பதற்கும் திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 1,08,000 ஏக்கரில் இப்பணிகள் முடிந்துள்ளன. நடப்பாண்டில், 574 கோயில்களில் குடமுழுக்குகள் நடத்தப்பட்டன. திருச்செந்தூர் கோயிலில் ரூ.305 கோடியிலும், பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ரூ.166 கோடியிலும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ.146 கோடி செலவிலும் பெருந்திட்ட பணிகள் நடந்து வருகின்றன. வரும் நிதியாண்டில், 400 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்படும். வரும் ஆண்டில், பழனி, திருத்தணி, சமயபுரம் ஆகிய கோயில்களில் பெருந்திட்ட பணிகள் ரூ.485 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

* சிறுபான்மையினர், பிசி,சீர்மரபினர் எம்பிசி துறைக்கு ரூ.1,580 கோடி

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளின் செயல்பாட்டை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில், ரூ.36.25 கோடியில் 9 விடுதிகளின் கட்டுமானப் பணிகள் நடக்கிறது.

பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக ரூ.252 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்காக ரூ.305 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1,580 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பொலிவாகும் தேவாலயங்கள்

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், ‘‘தேவாலயங்களை பழுதுபார்ப்பதற்கும், புதுப்பிப்பதற்கும் வழங்கப்படும்  மானியமும், ரூ.6 கோடியில் இருந்து 10 கோடியாக உயர்த்தப்படும். மதுரை புனித ஜார்ஜ் தேவாலயம், தஞ்சாவூர் ஸ்வார்ட்ஸ் தேவாலயம்,  சேலம் கிறிஸ்து தேவாலயம் உள்ளிட்டவை புதுப்பிக்கப்படும் என்றார்

* நீலகிரியில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்

நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தை, தென்காவிரி வனவிலங்கு சரணாலயத்துடன் இணைக்கும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், கோபிசெட்டிபாளையம் வட்டங்களில் உள்ள 80,567 ஹெக்டேர் வனப்பரப்பில் ‘தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்’ என்னும் புதிய சரணாலயம் ஏற்படுத்தப்படும். இது தமிழ்நாட்டின் 18வது சரணாலயமாகும் என்றார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

Related Stories: