×

அம்ரித்பால் சிங்குக்கு எதிரான நடவடிக்கை எதிரொலி லண்டன் இந்திய தூதரகத்தில் ‘காலிஸ்தானி’ கொடியேற்றிய கும்பல்: டெல்லி தூதரிடம் ஒன்றிய அரசு கடும் கண்டனம்

லண்டன்: அம்ரித்பால் சிங்குக்கு எதிரான நடவடிக்கை எதிரொலியாக லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் ‘காலிஸ்தானி’ கொடியேற்றிய கும்பல் செயலை டெல்லியில் உள்ள தூதரை அழைத்து தனது கண்டனத்தை ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் பதிவு செய்துள்ளது. பஞ்சாபில் ‘காலிஸ்தானி’ ஆதரவு அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங், தப்பியோடிய குற்றவாளியாக போலீசார் அறிவித்துள்ளனர். அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். அம்ரித்பால் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது ஜலந்தரில் இரண்டு எப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டன.

இதுவரை 112 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் அசம்பாவிதங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டன் நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தில் ‘இந்தியா ஹவுஸ்’ பகுதிக்குள் புகுந்த ‘காலிஸ்தான்’ ஆதரவாளர்கள், இந்திய தேசிய கொடியை அகற்றிவிட்டு காலிஸ்தான் கொடியை ஏற்றினர். அலுவலகத்தின் கண்ணாடிகளை உடைத்தனர். தகவலறிந்த போலீசார், தூதரகத்திற்கு முன்பு குவிந்திருந்த கும்பலை அப்புறப்படுத்தினர். பின்னர் தூதரகத்திற்குள் இருந்த அதிகாரிகள் மீண்டும் தேசிய ெகாடியை ஏற்றினர். மேலும் தூதரக கட்டிடத்தின் முன்பு மிகப்பெரிய தேசிய கொடியை கட்டி வைத்துள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரிடம் ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. அதில், ‘லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு ஏன் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை. வியன்னா உடன்படிக்கையின்படி, தூதரக பாதுகாப்பு என்பது இங்கிலாந்து அரசின் பொறுப்பிற்குள் வருகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இங்கிலாந்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் அலெக்ஸ் எல்லிஸ் வெளியிட்ட பதிவில், ‘லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் நடந்த வெட்கக்கேடான செயலை கண்டிக்கிறேன். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Amritpal Singh ,Indian ,London ,Union government ,Delhi , Union Govt strongly condemns Amritpal Singh, Indian Embassy in London, 'Khalistani' flag hoisting gang
× RELATED சிறையில் இருந்தபடியே வென்ற 2...