×

கோயம்பேடு மார்க்கெட்டில் கத்தியுடன் கும்பல் அராஜகம்: வியாபாரிகள், பொதுமக்கள் ஓட்டம்

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் மோதிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்றிரவு ஒரு கும்பல் கத்தி, கற்களால் சரமாரியாக தாக்கிக்கொண்டு அங்குமிங்கும ஓடிக்கொண்டிருந்தனர். இதை பார்த்ததும் வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் மற்றும் பொருட்கள் வாங்க வந்திருந்த பொதுமக்கள் என அனைவரும் பயத்தில் ஓட்டம் பிடித்தனர். இதன்காரணமாக மார்க்கெட் வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது; கோயம்பேடு மார்க்கெட்டில் இரவு நேரங்களில் வெளியாட்கள் தங்கி மதுஅருந்திவிட்டு சண்டையிட்டு கொள்கின்றனர்.

அப்போது அவர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் கற்களால் ஒருவரைஒருவர் தாக்கி கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு வருடத்துக்கு முன் கோயம்பேடு மார்க்கெட்டில் கையில் பெரிய அரிவாளுடன் நுழைந்த ரவுடி ஒரு டீ கடையில் புகுந்து மாமூல் கேட்டபோது மாமூல் கொடுக்க மறுத்த நபரை வெட்டினார். ரவுடியை பிடிக்க முயன்ற கூலி தொழிலாளி 4 பேரையும் மர்ம கும்பல் வெட்டியது. இதுபோல் நேற்றிரவு ஒரு கும்பல் கத்தி மற்றும் கற்களால் தாக்கிக்கொண்டுள்ளது. மார்க்கெட்டில் மீண்டும் வெளியாட்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே, போலீசார் உடனடியாக மார்க்கெட்டில் சோதனை நடத்தி மார்க்கெட்டுக்கு சம்பந்தமில்லாதவர்கள் தங்குவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Koyambedu market , Knife-wielding gang anarchy at Koyambedu market: Traders, public run
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வெளிமாநில...