×

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஐகோர்ட்டில் ஓபிஎஸ் வழக்கு: நாளை மறுநாள் விசாரணை..!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வமும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், கட்சியில் நீக்கப்பட்டதை எதிர்த்தும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான  எம்.எல்.ஏக்கள் மனோஜ் பாண்டியன்,  வைத்திலிங்கம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள், உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

இதையடுத்து, கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு நேற்று விசாரித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 22 வரை வெளியிட வேண்டாம். தேர்தல் நடைமுறைகள் தொடரலாம் என உத்தரவிட்டார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வமும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மனு தொடர்பாக வழக்கறிஞர் ராஜலெட்சுமி ஆஜராகி நீதிமன்றத்தில் முறையிட்டார்.

ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி குமரேஷ்பாபு சம்மதம் தெரிவித்தார். ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் இணைந்து ஓ பன்னீர்செல்வம் மனுவும் நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என்றும் அறிவித்தார்.


Tags : OPS ,ICourt ,AIADMK ,General Secretary , OPS case in ICourt seeking ban on election of AIADMK General Secretary: Hearing next day tomorrow..!
× RELATED பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த...