கேரள நடிகைகளுடன் உல்லாசம்: கைதான கல்யான மன்னன் போலீசாரிடம்‘அக்ரிமென்ட்’ போட சொல்லி கெஞ்சல்

பண்ருட்டி: கேரள சினிமா மற்றும் சீரியல் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்த கைதான கல்யாண மன்னன் அக்ரிமென்ட் போடும்படி போலீசாரிடம் கெஞ்சியுள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி வஉசி நகரை சேர்ந்தவர் சுந்தர் மற்றும் முத்துக்குமரன் ஆகியோர் இணைந்து பண்ருட்டியில் நடத்தி வரும் பூச்சி மருந்து கடையில் கடந்த 10ம் தேதி இரவு ரூ.4.70 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பண்ருட்டி போலீசார் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்த நேமத்தை சேர்ந்த ஷாகுல் அமீது (62) என்பவரை கேரளாவில் கைது செய்தனர். விசாரணையில் போலீசாரிடம் ஷாகுல் அமீது அளித்த வாக்கு மூலம் வருமாறு: பி.ஏ. பட்டதாரியான நான் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தேன். அப்போது நெல்லிக்குப்பத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்தேன்.

பின்னர் அந்த பெண்ணை பிரிந்து விட்டேன். இதைதொடர்ந்து மதுரையில் ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்தேன். கொஞ்ச காலத்தில் அவரையும் பிரிந்துவிட்டேன். 3வதாக நேமத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்து அவருடன் வசிக்கிறேன். இந்நிலையில் சம்பவத்தன்று, நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தேன். அந்த பஸ், நள்ளிரவில் பண்ருட்டி வந்த போது, வயிற்று வலி ஏற்பட்டதால் இறங்கி விட்டேன். அங்கு பூச்சி மருந்து கடை பூட்டி கிடப்பதை பார்த்ததும் கொள்ளையடிக்க முடிவு செய்தேன். கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து, பணத்தை திருடினேன். பின்னர் விழுப்புரம் வழியாக கேரளா சென்று, அங்கு சினிமா மற்றும் சின்னத்திரை நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தேன்.

இதில் ஒரு நடிகைக்கு ரூ.40 ஆயிரம் வரைக்கும் செலவு செய்தேன். ஆனாலும் மனம் திருப்தி அடையவில்லை. திருடிய பணத்தில் தற்போதுள்ள ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை தங்களிடம் கொடுத்துவிட்டேன். மீதமுள்ள ரூ. 3 லட்சத்து 20 ஆயிரத்தை கடை உரிமையாளரிடம் குறிப்பிட்ட நாளில் தருவதாக ஒரு ‘அக்ரிமென்ட்’ போட்டு திருப்பி தந்து விடுகிறேன். என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்து கெஞ்சியதாக போலீசார் தெரிவித்தனர். ஷாகுல் அமீது மீது பல்வேறுபகுதியில் பணத்தை கொள்ளையடித்ததாக 10 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

* கொள்ளையடித்த நகைகளுடன் கோவாவில் சுற்றுலா: கிருஷ்ணகிரி வாலிபர் சிக்கினார்

கிருஷ்ணகிரி பாலாஜி நகரைச் சேர்ந்த மோகன் என்பவர் வீட்டில் கடந்த 15ம் தேதி 50 பவுன் நகை  கொள்ளையடிக்கப்பட்டது. விசாரணையில், கிருஷ்ணகிரி அடுத்த தண்டேகுப்பத்தைச் சேர்ந்த பழைய குற்றவாளி சதீஷ்குமார்(25) என்பது தெரிந்தது. நகைகளுடன் அவர் கோவாவுக்கு சுற்றுலா சென்றதும் தெரிந்தது. உடனடியாக தனிப்படை போலீசார் கோவாவுக்கு விரைந்து சென்று, அங்கு பதுங்கியிருந்த சதீஷ்குமாரை கைது செய்தனர். விசாரணையில் கொள்ளையடித்த நகைகளை, தனது நண்பர்களான திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம், வைப்பூரை சேர்ந்த விக்கி(எ) விக்ரம், அப்பு(எ) விமல் ஆகியோரிடம் கொடுத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 80 பவுன் நகைகளை பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: